இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் உறுப்பினர் அங்கீகாரத்தை ரத்து செய்ததாக உலக மல்யுத்த கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
உலகளவில் மல்யுத்த போட்டிகளில் கலந்துகொள்ளும் நாடுகள் உலக மல்யுத்த கூட்டமைப்பில் உறுப்பினர்களாக அங்கம் வகிக்கின்றனர். அந்த வகையில் இந்தியாவும் அந்த கூட்டமைப்பில் அங்கம் வகித்து வருகின்றது. தேர்தல் மூலம் நாட்டின் மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் எனப் பல்வேறு விதிமுறைகளை உலக மல்யுத்த கூட்டமைப்பு கொண்டுள்ளது. சர்வதேச அளவில் நடக்கும் மல்யுத்த போட்டிகள் அனைத்தும் உலக மல்யுத்த கூட்டமைப்பின் மேற்பார்வையில் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவராக பாஜக எம்.பி. பிரிஜ்பூஷண் சரண் சிங் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், சரண் சிங் மற்றும் தேசியப் பயிற்சி முகாமில் உள்ள பயிற்சியாளர்கள், நடுவர்கள் ஆகியோர் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் குற்றம் சாட்டியிருந்தார். இதனைத் தொடர்ந்து இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆனால் பிரிஜ்பூஷண் சரண் சிங் தேர்தலில் தனக்கு ஆதரவான ஆட்களையே மீண்டும் நிற்க வைத்துள்ளதாகவும் புகார்கள் எழுந்தன. அதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றம், காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையில் குழு ஒன்றை அமைத்து நேர்மையாக இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தேர்தலை நடத்த உத்தரவிட்டது.
இந்த நிலையில்தான் உலக மல்யுத்த கூட்டமைப்பு கடந்த ஜூன் மாதம் 30 ஆம் தேதி அடுத்த 45 நாட்களுக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால், தற்போது வரை தேர்தல் நடத்தப்படாததால் இந்தியாவின் உறுப்பினர் அங்கீகாரத்தை ரத்து செய்துள்ளது. இதன் மூலம் சர்வதேசப் போட்டிகளில் விளையாடும் இந்திய மல்யுத்த வீரர்கள் போட்டியின் போது குறிப்பிட்ட நாடு என்பதை உரிமை கொண்டாட முடியாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.