
ஜம்மு - காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதிக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள் மீது கடந்த 22ஆம் தேதி (22.04.2025) பயங்கரவாதக் கும்பல் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியது. இதில் 26 பேர் பரிதாபமாகக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இந்தியா மட்டுமல்ல பல்வேறு நாட்டுத் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, பஹல்காம் உள்ளிட்ட ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு தீவிர கண்காணிப்பில் இந்திய ராணுவப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாகப் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் பாதுகாப்பு தொடர்பான பல முக்கிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதோடு பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேற வேண்டும், இந்தியா - பாகிஸ்தான் எல்லை மூடல், இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் மே 1ஆம் தேதிக்குள் வெளியேற வேண்டும். சிந்து நதிநீர் பங்கீடு ஒப்பந்தம் ரத்து உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகளைப் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா எடுத்தது. இதனால், இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில் பாகிஸ்தானைச் சேர்ந்த செய்தி மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு உட்பட மொத்தம் 16யூடியூப் சேனல்களுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்தியா குறித்து தவறான மற்றும் அவதூறு கருத்துக்களைப் பரப்புவதாகக் கூறி மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது மத்திய உள்துறை அமைச்சகத்தால் தடைசெய்யப்பட்டுள்ள இந்த யூடியூப் செய்தி சேனல்கள் சுமார் ஒரு மில்லியன் முதல் 2 மில்லியன் அளவிற்குச் சந்தாதாரர்களைக் கொண்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. தடை செய்யப்பட்ட யூடியூப் சேனல்களில் டான் நியூஸ், சமா டிவி, ஆரி நியூஸ், ஜியோ நியூஸ் உள்ளிட்டவையும் அடங்கும்.