முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் நேற்று முன்தினம் 08/12/2021 பிற்பகல் நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் விபத்தில் சிக்கி கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் பிபின் ராவத்தோடு பயணித்த அவரது மனைவி மதுலிகா ராவத், 11 இராணுவ அதிகாரிகளும் உயிரிழந்தனர். நாட்டையே சோகத்திற்குள்ளாக்கியுள்ளது இந்த துயர நிகழ்வு. இந்த விபத்தில் சிக்கிய கேப்டன் வருண் சிங் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் நேற்று அவர் பெங்களூரில் மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இதனைத்தொடர்ந்து நேற்று விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு வெலிங்டனில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து இறந்தவர்களின் உடல்கள் நேற்று இரவே டெல்லி கொண்டு செல்லப்பட்டது. இன்று காலை முதல் பல்வேறு அரசியல் கட்சியினர், மூத்த ராணுவ அதிகாரிகள், வெளிநாட்டு தூதர்கள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர். அதனைத்தொடர்ந்து டெல்லி கே.காமராஜ் மார்க் இல்லத்திலிருந்து முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி ஆகியோரின் உடல் இறுதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, கண்டோன்மெண்ட்டில் உள்ள மயானத்தில் ஒரே தகன மேடையில் இருவரின் உடலும் அருகருகே தகனம் செய்யப்பட்டது.
தந்தை பிபின் ராவத், தாய் மதுலிகாவின் உடல்களுக்கு இறுதிச் சடங்குகளைச் செய்த அவரது மகள்கள், தீ மூட்டினர். 17 சுற்று குண்டுகள் முழங்க 800 வீரர்களின் மரியாதையுடன் பிபின் ராவத் உடல் தகனம் செய்யப்பட்டது.