மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சியமைக்க வருமாறு தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்து, அதற்கான முடிவுகளும் வெளியாகி 15 நாட்களுக்கு மேல் ஆகும் நிலையில் ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் பாஜக- 105 இடங்களையும், சிவசேனா- 56 இடங்களையும், தேசியவாத காங்கிரஸ் கட்சி- 54 இடங்களையும், காங்கிரஸ் கட்சி- 44 இடங்களையும், இதர கட்சிகள்- 29 இடங்களையும் கைப்பற்றியுள்ளனர். ஆட்சி அமைக்க பெரும்பான்மை 145 உறுப்பினர்களின் ஆதரவு இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜக கட்சி சிவசேனாவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. இரு கட்சிகளில் உள்ள உறுப்பினர்களின் பலம் 161 ஆக உள்ளது. அதிபெரும்பான்மை உறுப்பினர்களை கொண்டிருந்தும் கூட, இந்த கூட்டணியால் ஆட்சி அமைக்க முடியவில்லை. ஏனெனில் சிவசேனா கட்சி முதல்வர் பதவியை முதலில் எங்கள் கட்சிக்கு இரண்டரை வருடங்களும், அதன் பிறகு பாஜக கட்சி இரண்டரை வருடங்கள் பதவி வகிக்கட்டும் என்று பாஜகவுக்கு கெடு விதித்தது. ஆனால் இதை பாஜக கட்சி ஏற்கவில்லை.
இதனால் பாஜகவுடனான கூட்டணியை முறித்து கொண்ட சிவசேனா கட்சி, காங்கிரஸ் கட்சி மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆதரவை நாடியது. இதற்கான பேச்சுவார்த்தையில் சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே நேரடியாக களமிறங்கியுள்ளார்.

இதனிடையே சிவசேனா கட்சியின் தலைவர்கள் ஆளுநரை நேரில் சந்தித்து, தங்கள் ஆட்சி அமைக்க விரும்புவதாகவும், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவு தங்களுக்கு இருப்பதாகவும், எனவே ஆட்சி அமைப்பதற்கு 48 மணி நேர அவகாசம் தருமாறு ஆளுநரிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் ஆளுநர் சிவசேனாவின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டார் என்று சிவசேனாவின் ஆதித்ய தாக்கரே தெரிவித்தார். இது குறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சிவசேனா கட்சித்தலைவர்கள் ஆட்சி அமைப்பதற்கு மூன்று நாட்கள் அவகாசம் கேட்டதாகவும், ஆட்சி அமைப்பதற்கு தேவையான கட்சிகளின் ஆதரவு கடிதம் ஆளுநரிடம் அளிக்கவில்லை. அதன் காரணமாக சிவசேனாவின் கோரிக்கையை ஆளுநர் ஏற்கவில்லை என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மாநிலத்தில் மூன்றாவது பெரிய கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சியை ஆட்சி அமைக்க முன்வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்தார். அதை தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் ஆளுநரை சந்தித்தனர். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் நவாப்மாலிக், ஆளுநர் அழைப்பு கடிதம் தந்துள்ளது பற்றி காங்கிரஸ் கட்சியுடன் கலந்தாலோசித்து நாளைக்குள் முடிவெடுப்போம் என்று கூறினார்.

மேலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு நாளை (12/11/2019) இரவு 08.30 மணி வரை ஆளுநர் கெடு விதித்துள்ளதாக கூறினார். ஆளுநரின் இந்த அதிரடி முடிவால் சிவசேனா கட்சித்தலைவர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதேபோல் சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் நடத்தி வந்த பேச்சுவார்த்தைக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் நிலவி வரும் அரசியல் குழப்பத்திற்கு நாளை (12/11/2019) தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.