Skip to main content

பாடப்பகுதி நீக்கப்பட்ட சர்ச்சை குறித்து அருந்ததி ராய் கருத்து...

Published on 13/11/2020 | Edited on 13/11/2020

 

arunthathi roy about removal of her book from syllabus

 

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து தனது நூல் நீக்கப்பட்டது குறித்து அருந்ததி ராய் கருத்து தெரிவித்துள்ளார். 

 

எழுத்தாளர் அருந்ததி ராய் எழுதிய, “தோழர்களுடன் ஒரு பயணம்”(Walking with the comrades) என்ற புத்தகம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முதுகலை ஆங்கிலம் பாடத்திட்டத்தில் இடம்பெற்றிருந்தது. கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டிருந்த இந்த புத்தகம் மாவோயிஸ்ட்டுகளின் செயல்களை நியாயப்படுத்தும் கருத்துகளைக் கொண்டிருப்பதாக ஏ.பி.வி.பி. அமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், இந்த புத்தகத்தைப் பாடத்திட்டத்திலிருந்து நீக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தது. இந்நிலையில், இந்த புத்தகம் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்படுவதாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

 

அருந்ததி ராயின் இந்த புத்தகம் நீக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் எழுந்துவரும் சூழலில், பாடத்திட்டத்திலிருந்து தனது நூல் நீக்கப்பட்டது குறித்து அருந்ததி ராய் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், "எனது புத்தகம் இத்தனை ஆண்டுகளாகப் பல்கலைக்கழக பாடத்திட்டத்திலிருந்தது எனக்குத் தெரியாது என்பதால் அதிர்ச்சி, ஆச்சரியம் என எதுவும் எனக்கு ஏற்படவில்லை. மாறாக எனது புத்தகம் இத்தனை ஆண்டுகளாக மாணவர்களுக்குப் பாடமாகக் கற்பிக்கப்பட்டது மகிழ்ச்சியை அளிக்கிறது. மேலும் ஒரு எழுத்தாளராகப் புத்தகம் எழுதுவது மட்டுமே எனது கடமை. பல்கலைக்கழக பாடத்திலிருந்து நீக்கப்பட்டதற்கு எதிராகப் போராடுவது இல்லை.

 

நமது தற்போதைய ஆட்சியாளர்களால் ஒரு படைப்பின் மீது காட்டப்படும் இந்த குறுகிய, ஆழமற்ற, பாதுகாப்பற்ற அணுகுமுறை, அக்கட்சியின் எதிர்ப்பாளர்களுக்கு மட்டும் தீங்கு விளைவிப்பதில்லை. இது லட்சக்கணக்கான சொந்த ஆதரவாளர்களுக்கு தீங்கு விளைவிக்கும். உலகில் மரியாதை மற்றும் கௌரவத்திற்கான இடத்திற்காக பாடுபடும் ஒரு சமூகமாக, ஒரு நாடாக இந்நடவடிக்கைகள் நமது கூட்டு அறிவுசார் திறனை மட்டுப்படுத்தி தடுமாற வைக்கும்" எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்