தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்துகொண்ட இந்து அமைப்பை சேர்ந்த தலைவர் ஒருவர், தொகுப்பாளர் இஸ்லாமியர் என்ற காரணத்தால் அவரது முகத்தை பார்க்க மாட்டேன் என கூறி முகத்தை மூடியபடி பேசியது பலரது எதிர்ப்புகளையும் பெற்றுள்ளது.
சோமாட்டோ நிறுவன ஊழியர் இஸ்லாமியர் என்பதால் தனது ஆர்டரை கேன்சல் செய்ததாக கடந்த இரு தினங்களுக்கு முன்பு அமித் சுக்லா என்பவர் ட்விட்டரில் பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார். இந்நிலையில் இது குறித்து நியூஸ் 24 என்ற செய்தி சேனல், விவாத நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்தது.
இந்த நிகழ்ச்சியில் ’ஹம் இந்து (நாம் இந்து)’ எனும் வலதுசாரி அமைப்பு ஒன்றில் தலைவர் அஜய் கவுதம் கலந்துகொண்டார். ஆனால், நிகழ்ச்சியின் நெறியாளர் பெயர் காலீத் என அறிந்த அஜய் கவுதம், அவரைப் பார்க்க மறுத்ததோடு தன் கைகளால் கண்களை மறைத்தபடியே பேசியுள்ளார். மேலும் முஸ்லிம் நெறியாளரை கண்களால் பார்த்து பேச முடியாது எனவும் அவர் மறுத்து உள்ளார். அவர் இப்படி பேசும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அவரது இந்த நடவடிக்கைக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.