இந்தியா - சீனா எல்லையில் அமைந்துள்ள மாநிலங்களில் ஒன்று அருணாச்சல பிரதேஷ். இந்த மாநிலத்தைச் சீனா தன்னுடைய பகுதி என உரிமை கொண்டாடி வருகிறது. இந்தநிலையில் அண்மையில் இந்தியா, அருணாச்சல பிரதேசத்தை ஒட்டியுள்ள மெய்யான எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் (line of actual control) கண்காணிப்பை தீவிரப்படுத்தியது.
அந்த பகுதியை கண்காணிக்க அதிநவீன ட்ரோன்களை களமிறக்கியத்துடன், ஆயுத அமைப்பு திறன் ஒருங்கிணைந்த ருத்ரா ஹெலிகாப்டரையும் எல்லை கண்காணிப்பிற்குப் பயன்படுத்தத் தொடங்கியது. சீனா எதாவது ஆக்கிரமிப்பு முயற்சியை எடுத்தால், அதைத் தடுக்கவே கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தநிலையில் தற்போது அருணாச்சல எல்லைப்பகுதியில், இந்தியா இராணுவம் புதிய ஆயுதங்களை களமிறக்கி படைகளை பலப்படுத்தியுள்ளது. எம்777 வகை சிறிய இலகு ரக பீரங்கிகள், எல் 70 ரக அதிநவீன விமான எதிர்ப்பு ஏவுகணை உள்ளிட்டவற்றை இந்தியா அருணாச்சல பிரதேச எல்லையில் நிலை நிறுத்தியுள்ளது. இதில் எம்777 வகை சிறிய இலகு ரக பீரங்கிகள் லடாக் எல்லையிலும் நிலை நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சீனா எல்லைப்பகுதியில் கட்டுமானங்களை மேற்கொண்டு வரும் நிலையிலும், சீன இராணுவம் எல்லையில் வருடாந்திர பயிற்சியை மேற்கொண்டுள்ள நிலையிலும் இந்தியா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே எல்லை பிரச்சனை தொடர்பாக இந்தியாவும், சீனாவும் இம்மாதத்திலேயே 14 ஆம் கட்ட பேச்சுவார்த்தையை நடத்தப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இருதரப்புக்கும் இடையே நடந்த 13 ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் எவ்வித தீர்மானமும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.