கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள ஒயிட்ஃபீல்ட் 80 அடி சாலை என்ற இடத்தில் ராமேஸ்வரம் கஃபே என்ற பிரபல உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த 1 ஆம் தேதி (01.03.2024) பிற்பகல் 01.05 மணியளவில் திடீரென யாரும் எதிர்பாராத வேளையில் அடுத்தடுத்து இரண்டு முறை மர்மப் பொருள் வெடித்தது. இந்த வெடி விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் பேர் படுகாயமடைந்தனர். இந்த வெடி விபத்தின் முதற்கட்ட விசாரணையில், இது சிலிண்டர் வெடிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. அதே சமயம் வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில், தடயவியல் நிபுணர்கள் குழு தடயங்களைச் சேகரித்து ஆய்வு நடத்தினர். பின்னர் அது திட்டமிடப்பட்ட குண்டு வெடிப்பு என்பது உறுதி செய்யப்பட்டது.
இந்தச் சம்பவம் பெங்களூர் நகரத்தையே பரபரப்பில் ஆழ்த்திய நிலையில், ராமேஸ்வரம் கஃபே சுற்று வட்டாரப் பகுதிகளில் பல முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டது. சம்பந்தப்பட்ட ராமேஸ்வரம் கஃபே ஹோட்டலுக்கு மர்ம நபர் ஒருவர் வருவதும், பையை வைத்துவிட்டு வெளியே செல்வது தொடர்பான சி.சி.டி.வி. காட்சி வெளியாகி இருந்தன. மேலும் சந்தேகப்படும் நபரின் புகைப்படம் மற்றும் சிசிடிவி காட்சிகள் ஆகியவையும் வெளியிடப்பட்டது. இதற்கிடையே இந்த வழக்கு தேசியப் புலனாய்வு முகமைக்கு (N.I.A.) மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அதே சமயம் உணவகத்தில் வெடிகுண்டு வைத்தவர் குறித்து தகவல் அளிப்பவருக்கு ரூ. 10 லட்சம் சன்மானமாக வழங்கப்படும் எனத் தேசியப் புலனாய்வு முகமை அறிவித்திருந்தது.
இந்நிலையில், ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) மூன்று மாநிலங்களில் பல இடங்களில் சோதனைகளை மேற்கொண்டது. அதனைத் தொடர்ந்து முக்கிய குற்றவாளியை தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்தது. இது குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) நேற்று (27.03.2024) மூன்று மாநிலங்களில் பல இடங்களில் சோதனைகளை மேற்கொண்டது. அதனைத் தொடர்ந்து முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார். கர்நாடகாவில் 12, தமிழ்நாட்டில் 5 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் ஒன்று உட்பட மொத்தம் 18 இடங்களில் என்.ஐ.ஏ. குழுக்கள் சோதனை செய்த பின்னர் முஸம்மில் ஷரீப் கைது செய்யப்பட்டு துணை குற்றவாளியாக காவலில் வைக்கப்பட்டார்.
கடந்த மார்ச் 3 ஆம் தேதி இந்த வழக்கை என்.ஐ.ஏ. விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. முக்கிய குற்றவாளியான முசாவிர் முன்னதாகவே என்.ஐ.ஏ.வால் அடையாளம் காட்டப்பட்டார். குண்டுவெடிப்பை நடத்தியவர் ஷசீப் உசேன். மற்றொரு சதிகாரரான அப்துல் என்பவரையும் என்.ஐ.ஏ. அடையாளம் கண்டுள்ளது. மற்ற வழக்குகளில் என்.ஐ.ஏ. ஏஜென்சியால் தேடப்பட்டவர் மதின் தாஹா. இவர்கள் இரண்டு பேரும் தலைமறைவாக இருக்கிறார்கள். மார்ச் 1 ஆம் தேதி பெங்களூரு புரூக்ஃபீல்டில் உள்ள ஐடிபிஎல் சாலையில் உள்ள கபேயில் ஐ.இ.டி. வெடிப்புச் சம்பவத்தில் ஈடுபட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற இருவருக்கு முஸம்மில் ஷரீப் தளவாட ஆதரவை வழங்கியதாக என்.ஐ.ஏ. விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் பல வாடிக்கையாளர்கள் மற்றும் ஹோட்டல் ஊழியர்கள் காயமடைந்தனர். அவர்களில் சிலர் கடுமையாக, வெடிவிபத்தில் சிக்கினர். மேலும் ஹோட்டல் சொத்துக்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
இந்த மூன்று குற்றவாளிகளின் வீடுகளிலும், மற்ற சந்தேக நபர்களின் வீடுகளிலும், கடைகளிலும் இன்று (28.03.2024) சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின் போது பணம் மற்றும் பல்வேறு டிஜிட்டல் சாதனங்கள் கைப்பற்றப்பட்டன. தலைமறைவான குற்றவாளிகளைப் பிடிக்கவும், குண்டுவெடிப்புக்குப் பின் உள்ள பெரிய சதியைக் கண்டறியவும் முயற்சிகள் நடந்து வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.