இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் பைரன் சிங் தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் பெரும்பான்மைச் சமூகமாக உள்ள மைத்தேயி சமூகத்தினர் தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்துச் சலுகைகள் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதையடுத்து மைத்தேயி சமூகத்தைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துக் கடந்த மே 3 ஆம் தேதி மணிப்பூரின் சுராசந்த்பூரில் பழங்குடியின மக்கள் பாதயாத்திரை மேற்கொண்டனர். அப்போது, இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்ததில், அது கலவரமாக மாறியது.
இந்தக் கலவரத்தைத் தொடர்ந்து கடந்த மே மாதம் 4 ஆம் தேதி குக்கி பழங்குடியினப் பெண்கள் இருவரை மைத்தேயி இன இளைஞர் கும்பல் ஒன்று ஆடைகளைக் களைந்து இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், நாட்டையே உலுக்கியுள்ள இந்தச் சம்பவத்திற்கு அரசியல் கட்சியினர், மனித உரிமை ஆர்வலர்கள் எனப் பலரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையில் அண்டை நாடுகளில் இருந்து சட்ட விரோதமாக வெளிநாட்டினர் மணிப்பூரில் குடியேறுதலைத் தடுத்தல், போதைப்பொருள் விளைவித்தல் போன்றவற்றைக் குறிப்பிட்ட சமுதாயத்தினர்தான் செய்து வருகின்றனர். எனவே இந்த விவகாரத்தில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை செய்ய வேண்டும் என மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தலைமை நீதிபதி சந்திர சூட் இந்த வழக்கு குறித்து கருத்து தெரிவிக்கையில், “மணிப்பூர் வன்முறை தொடர்பாக ஏராளமான வழக்குகள் விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டுள்ளன. அந்த நேரத்தில் போதைப்பொருள் விளைவித்தலைத் தடுத்தல், அண்டை நாடுகளில் இருந்து சட்ட விரோதமாகக் குடியேறுவதைத் தடுப்பதற்காக சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையைக் கோரும் மனுவை விசாரணைக்கு ஏற்பது என்பது மிகவும் கடினமானது. அந்த மனுவில் குறிப்பிட்ட சமூகத்தினரைக் கடுமையாக விமர்சித்திருக்கிறீர்கள். மேலும் அவர்களைத் தீவிரவாதிகளைப் போல் உருவகப்படுத்தி இருக்கிறீர்கள். இதனை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. மணிப்பூர் வன்முறையில் ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்துவது நடந்து வருகிறது. இதனை உச்ச நீதிமன்றம் அனுமதிக்காது” என்ற கருத்தைத் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை செய்ய வலியுறுத்திய மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்துள்ளார். மேலும், மணிப்பூர் வன்முறை தொடர்பான வழக்கை விசாரிப்பது கடினம் என உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திர சூட் கருத்து தெரிவித்துள்ளார்.