உத்தர பிரதேச மாநிலத்தில் இரண்டு தங்க சுரங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக வெளியான சம்பவம் உண்மையில்லை என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இரண்டு தினங்களுக்கு முன்பு அம்மாநிலத்தில் சோன்பத்ரா பகுதியில் 3350 டன் எடை கொண்ட தங்க சுரங்கங்கள் இருப்பதை அம்மாநில தொல் பொருள்துறையினர் தற்போது கண்டுபிடித்துள்ளனர் எனவும் மேலும் அந்த பகுதியில் ஒரு இடத்தில் 2700 டன் தங்கமும், ஹார்டீ என்ற இடத்தில் 650 டன் அளவுக்கு தங்கமும் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளார்கள் எனவும் தகவல்கள் பரவியது.
மேலும் சுரங்கத்தில் உள்ள தங்கம் முழுவதையும் வெட்டி எடுத்தால் இந்திய நாட்டின் தங்கத்தின் கையிருப்பு 5 மடங்கு அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் இந்த தகவல் முழுவதும் தவறானது என்று தொல்லியல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சோன்பத்ரா பகுதியை ஆட்சி செய்த மன்னர் ஒருவர் அவரின் கோட்டைக்கு இருபுறமும் தங்கத்தை புதைத்து வைத்திருந்ததாகவும், அந்த தங்கத்தின் சிறு பகுதியே தற்போது கிடைத்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். டன் கணக்கில் தங்கம் என்பதெல்லாம் தவறான தகவல் என்றும் அவர் கூறியுள்ளார். 100 முதல் 200 கிலோ வரை தங்கம் கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.