வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி கிட்டத்தட்ட ஒருவருடமாக விவசாயிகள், டெல்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாகவும், புதிய வேளாண் சட்டங்களை முறைப்படி திரும்பப் பெற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நவம்பர் 19ஆம் தேதி அறிவித்தார்.
இந்தநிலையில், இன்று (24.11.2021) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், "பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று, மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான நடைமுறைகளை நிறைவுசெய்தது. வரவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், இந்த மூன்று சட்டங்களையும் திரும்பப் பெறுவது எங்கள் முன்னுரிமையாக இருக்கும்" என தெரிவித்துள்ளார்.
மேலும், ஏழை மக்களுக்கு மாதந்தோறும் ஐந்து கிலோ இலவச அரிசி அல்லது கோதுமை மற்றும் கொண்டைக்கடலை ஆகியவற்றை ரேஷன் கடைகள் மூலமாக வழங்கும் பிரதம மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை அடுத்த ஆண்டு மார்ச் வரை நீட்டிக்கவும் மத்திய அமைச்சரவை முடிவெடுத்துள்ளதாக அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.
இம்மாத தொடக்கத்தில் உணவுத்துறை செயலாளர் சுதன்ஷு பாண்டே, நவம்பர் மாதத்திற்குப் பின்னர் பிரதம மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை நீட்டிக்க மத்திய அரசிடம் எந்த திட்டமும் இல்லை என தெரிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து, பல்வேறு எதிர்க்கட்சிகள் இத்திட்டத்தை நீட்டிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தன. இந்தநிலையில், தற்போது இலவச உணவு தானிய திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.