ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரிலிருந்து கடந்த 31 ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நோக்கிச் சென்று கொண்டிருந்த ஜெய்ப்பூர் - மும்பை விரைவு ரயில் மும்பை அருகே உள்ள பாலகர் என்ற ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது ரயிலிலிருந்த ரயில்வே பாதுகாப்புப் படை வீரர் (RPF) சேத்தன் சிங் என்பவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் அங்கிருந்து தப்பிக்க முயன்ற ரயில்வே பாதுகாப்புப் படை வீரரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து சேத்தன் சிங் கைது செய்யப்பட்ட பிறகு ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட செய்தி அறிக்கையில், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், தனிப்பட்ட மருத்துவச் சிகிச்சையிலிருந்து வந்ததாகவும், மேலும் அந்த விஷயம் குறித்து ரயில்வே தலைமைக்குத் தெரியாமல் பார்த்து வந்ததாகவும் தெரிவித்திருந்தனர். ஆனால் சிறிது நேரத்தில் அந்த அறிக்கை நீக்கப்பட்டு விட்டது.
இந்த நிலையில் துப்பாக்கிச் சூடு நடத்திய ரயில்வே காவலர் சேத்தன் சிங்கைக் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த மனுவில் அவரது மனநிலை குறித்து விசாரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.