இந்திய நாட்டின் 71- வது குடியரசு தினம் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக பிரதமர் நரேந்திர மோடி டெல்லி அமர் ஜவான் ஜோதியில் மரியாதையை செலுத்தினார். அதேபோல் போர் நினைவிடத்திற்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் மரியாதை செலுத்தினர். பிரதமருடன் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் முப்படை தளபதிகள் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர். குடியரசு தினத்தில் தேசிய போர் நினைவிடத்தில் பிரதமர் மரியாதை செலுத்துவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
குடியரசு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் வரலாறு காணாத அளவுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் விழா நடைபெறும் ராஜ்பாத்தில் டிரோன்கள் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் குடியரசு தின விழாவை காண வரும் பொது மக்களுக்கு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.
இதனிடைய டெல்லியில் உள்ள அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் இன்று மதியம் வரை மூடப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.