மஹாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக கட்சி சிவசேனாவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வருகிறது. அம்மாநில முதல்வராக பாஜக கட்சியின் முக்கிய தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளார். இந்நிலையில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் சிவசேனா கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் உள்ள 48 மக்களவை தொகுதிகளில் பாஜக கட்சி 23 இடங்களையும், சிவசேனா கட்சி 18 இடங்களையும் கைப்பற்றியது. பாஜக கட்சி மீண்டும் மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. பிரதமர் தலைமையிலான அமைச்சரவையில் கூட்டணி கட்சியான சிவசேனா கட்சிக்கு ஒரு அமைச்சர் பதவியை மட்டுமே வழங்கியது.
இந்நிலையில் மகாராஷ்டிரா அமைச்சரவை இன்னும் சில நாட்களில் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. அதனால் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா கட்சியின் ஒருவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட வேண்டும் என அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே பாஜக தலைமை அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுவும் சிவசேனா கட்சியின் இளைஞர் அணி தலைவரும், உத்தவ் தாக்ரே மகனும், சிவசேனா கட்சியின் நிறுவனர் பால் தாக்கரே பேரனுமான ஆதித்யா தாக்கவுரேக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட வேண்டும் என்று பாஜக தலைமைக்கு பரிந்துரை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மாநில சட்டப்பேரவையில் ஆட்சி அமைக்க தேவையான 144 இடங்களில் பாஜகவிற்கு 122 உறுப்பினர்கள் மட்டுமே உள்ள நிலையில் சிவசேனா ஆதரவு கட்டாயம் தேவை. ஏனெனில் சிவசேனா கட்சியில் 63 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களின் ஆதரவுடன் தான் மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக கட்சி ஆட்சி செய்து வருகிறது. சிவசேனா கட்சியின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் பாஜக உள்ளது. மேலும் துணை முதல்வர் பதவியை ஆதித்யா தாக்கரேவுக்கு வழங்க அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.