ரயில்வே துறையில் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில், பயணிகளுக்கு மசாஜ் சேவை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் மத்தியிலும், குறிப்பாக பெண்கள் மத்தியிலும் கடும் எதிர்ப்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் பாஜகவின் இந்த திட்டத்தை அக்கட்சியை சேர்ந்த இந்தூர் தொகுதி எம்.பி. சங்கர் லால்வானி கடுமையாக எதிர்த்து கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், "ரயில் பயணிகளுக்கு மசாஜ் சேவை வழங்கும் திட்டம் என்பது மிகவும் அபத்தமான ஒன்று. பெண்கள் இருக்கும் போது அவர்களுக்கு எதிரே இவ்வாறு மசாஜ் செய்துகொள்வது நமது கலாச்சாரத்துக்கும், பண்பாட்டுக்கும் ஏற்புடையதா?
ரயிலில் பயணிகளின் அவசர தேவைக்காக மருத்துவர்களை நியமிப்பதும், மருத்துவ உதவிகளை வழங்குவதும் அத்தியாவசியமானது. ஆனால், வருமானத்திற்காக இதுபோன்ற தரம் தாழ்ந்த திட்டங்கள் அவசியமற்றது என நான் கருதுகிறேன்" என தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் எதிர்ப்பை பெற்று வரும் இந்த திட்டத்திற்கு பாஜகவுக்கு உள்ளேயே தற்போது எதிர்ப்பு எழுந்திருப்பது குறிப்பிடத்தக்கது.