நாட்டின் புதிய கல்விக்கொள்கை சர்வதேச அளவில் பாராட்டைப் பெற்றுள்ளதாகப் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
ஆசிரியர் தினத்தினை முன்னிட்டு நாடு முழுவதிலும் சிறப்பாக பணியாற்றிய 45 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தேசிய நல்லாசிரியர் விருதை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நேற்று வழங்கினார். தமிழகத்தில் இருந்து இராமநாதபுரம் மாவட்டம் கீழாம்பல் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி ஆசிரியர் ராமச்சந்திரன் நல்லாசிரியர் விருதைப் பெற்றார்.
ஆசிரியர் தினவிழாவில் நல்லாசிரியர் விருது பெற்ற 45 ஆசிரியர்களுடன் தனது இல்லத்தில் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், நாடு முழுவதும் 14,500 பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் என்றும் தேசியக் கல்விக்கொள்கையின் முழு அம்சத்தையும் உள்ளடக்கிய மாதிரி பள்ளிகளாக செயல்படும் எனவும் கூறியுள்ளார். மேலும் அப்பள்ளிகளில் நவீன உள்கட்டமைப்பு வசதிகளும், ஸ்மார்ட் வகுப்பறைகளும், ஆய்வகங்களும், நூலகங்களும் இருக்கும் எனவும் கூறியுள்ளார்.
தேசிய கல்விக்கொள்கையை உருவாக்கியதில் ஆசிரியர்களின் பங்கு மிகப்பெரியது. மேலும், நாட்டின் புதிய கல்விக்கொள்கை சர்வதேச அளவில் பாராட்டுகளை பெற்றுள்ளதாக கூறிய பிரதமர் மோடி இங்கிலாந்தை பின்னுக்குத்தள்ளி உலகின் ஐந்தாவது பெரிய நாடாக இந்தியா உருப்பெற்றுள்ளதாகவும் 250 ஆண்டுகள் நம்மை ஆண்டவர்களை பொருளாதார வளர்ச்சியில் பின்னுக்குத்தள்ளி இருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் கூறினார்.