பரபரப்பான அரசியல் சூழலுக்கு இடையே நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.
மறைந்த நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்கள் ராம்ஜெத் மலானி, அருண்ஜெட்லி, குருதாஸ் தாஸ்குப்தா உள்ளிட்டோர்களுக்கு நாடாளுமன்றத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மேலும் மக்களவையில் 10 பேருக்கும், மாநிலங்களவையில் 5 பேரின் மறைவுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தொடரில் இரண்டு அவசர சட்டங்களுக்கு மாற்றான மசோதாக்களை தாக்கல் செய்து சட்டமாக நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரி குறைப்பு அவசர சட்டத்தை சட்டமாக்க மத்திய அரசு முயற்சி. அதேபோல் இ- சிகரெட் தயாரிப்பு, விற்பனைக்கான தடை விதிக்கும் அவசர சட்டத்தை சட்டமாக இயற்றவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் ஆறு ஆண்டுகள் வசித்தாலே குடியுரிமை தரும் சட்டத்திருத்த மசோதா நடப்பு தொடரிலே நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று (18/11/2019) தொடங்கி, டிசம்பர் மாதம் 13- ஆம் தேதி வரை நடக்கும் கூட்டத்தொடரில் பொருளாதார மந்தநிலை, வேலையின்மை, காஷ்மீர் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளனர்.
தேசிய ஜனநாயக கூட்டணி 2- ஆவது முறையாக மத்தியில் ஆட்சி பொறுப்பேற்ற பின் நடைபெறும் இரண்டாவது கூட்டத்தொடர் இதுவாகும்.
புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட வேலூர் மக்களவை உறுப்பினர் கதிர் ஆனந்த் உட்பட நான்கு உறுப்பினர்கள் இன்று பதவியேற்றனர். இவர்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.