பெங்களூரு, கோரமங்களாவில் உள்ள வி.ஆர். லே-அவுட்டில் தனியார் பெண்கள் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு, கடந்த ஜூலை 23 ஆம் தேதி இரவு 11 மணியளவில் புகுந்த மர்ம நபர் ஒருவர், விடுதியில் தங்கியிருந்த பிஹாரைச் சேர்ந்த 24 வயதான கிருத்தி குமாரி என்ற இளம்பெண்ணை சரமாரியாக கத்தியால் குத்தியும், கழுத்தை அறுத்தும் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றார். மூன்றாவது மாடியில் அரங்கேறிய இந்தக் கொடூர சம்பவத்தில் கிருத்தி குமாரி, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். மர்ம நபர் பெண்கள் விடுதியில் புகுந்ததை பார்த்த தங்கும் விடுதியில் இருந்த பெண்கள், பயத்தில் அவர் அவர் அறையில் ஒளிந்துக்கொண்டார். இதனால், மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோரமங்களா போலிசார், இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரதேப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து, விடுதி சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், முதல்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட கிருத்தி குமாரிக்கும், கொலையாளிக்கும் நேரடி தொடர்பு ஏதும் இல்லை என்று போலிசார் கூறுகின்றனர். 24 வயதான பிஹாரைச் சேர்ந்த கிருத்தி குமாரி தனியார் கம்பெனியில் வேலை செய்ததால், விடுதியில் தங்கியிருந்த சூழலில், கொடூரமாக கொள்ளப்பட்டது அம்மாநிலத்தில் பெரும் பரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து, கொலையாளி யார் என்பது குறித்து போலிசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், சிசிடிசி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கையில் மஞ்சள் பையுடன் பெண்கள் விடுதியின் மூன்றாவது தளத்திற்கு சென்ற இளைஞர், விருந்தாளி போல கதவைத் தட்டுகிறார். உடனே, கிருத்தி குமாரி கதவை திறந்தபோது நொடி பொழுதில் குத்தி கொலை செய்யும் அதிர்ச்சி சிசிடிசி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.
இதனிடையே, போலீசார் கொலையாளி அபிஷேக் என்ற இளைஞர் என்பதை அடையாளம் கண்டனர். மத்திய பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்த அபிஷேக், கொலை செய்யப்பட்ட கிருத்தி குமாரி தங்கியிருந்த அறையிலிருந்த வேறொரு பெண்ணைக் காதலித்து வந்ததாக போலீசார் கூறுகின்றனர். ஆனால், அபிஷேக்குக்கு வேலை கிடைக்காததால் அண்மையில் அவரை விட்டு அந்தப் பெண் விலகியுள்ளார். மேலும், கிருத்தி குமாரியின் பரிந்துரை பேரில் வேறொரு தங்கும் விடுதிக்கு மாறியதாக கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த அபிஷேக் கிருத்தி குமாரியைக் கொலை செய்து இருக்கலாம் என்று போலிசார் கூறுகின்றனர். இருப்பினும், தலைமறைவாக இருக்கும் அபிஷேக் கைது செய்யப்பட்டாலே கொலைக்கான உண்மை காரணம் தெரியவரும். இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்து பேசிய பெங்களூர் மாநகர கமிஷனர், "கோரமங்களா காவல் நிலைய எல்லையில் உள்ள தங்கும் விடுதியில் இளம்பெண், படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. நாங்கள் 3 தனிப்படைகளை அமைத்துள்ளோம்.
விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்..'' என்று சுருக்கமாக பதில் அளித்தார். இதனிடையே, பயோ மெட்ரிக் கொண்ட விடுதியின் நுழைவு வாயிலில் புகுந்து இளம்பெண்ணை ஒருவர் கொலை செய்து தப்பியதால், விளக்கம் கேட்டு விடுதி உரிமையாளருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.