இந்தியா உட்பட உலகம் முழுவதும் பல்வேறு பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரது தொலைபேசிகள் பெகாசஸ் உளவு மென்பொருளால் ஹேக் செய்யப்பட்டு, ஒட்டுக் கேட்கப்பட்டதாக பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. இந்திய எதிர்க்கட்சிகள் இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
அதேநேரத்தில், பெகாசஸ் மூலம் யாரும் உளவு பார்க்கப்படவில்லை எனவும் மத்திய அரசு கூறி வருகிறது. இந்நிலையில் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரிடம் பெகாசஸ் விவகாரம் குறித்து நேற்று கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "இதுகுறித்து கண்டிப்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும். தொலைபேசி ஒட்டுக்கேட்பு குறித்து நீண்ட நாட்களாக நாம் கேள்விப்பட்டு வருகிறோம். இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும்" எனத் தெரிவித்தார்.
மத்திய அரசு பெகாசஸ் விவகாரம் குறித்து விசாரணை நடத்தவும், நாடாளுமன்றத்தில் விவாதிக்கவும் மறுப்பு தெரிவித்து வரும் நிலையில், பாஜக கூட்டணியில் உள்ள முதல்வர் இவ்வாறு கூறியது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்நிலையில் நிதிஷ்குமாரின் கருத்து பற்றி, அவரது கட்சியைச் சேர்ந்த கவுஷலேந்திர குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர், "மத்திய அரசின் நலனுக்காக நிதிஷ்குமார் அவ்வாறு கூறினார். விசாரணை நடத்துவதில் தவறில்லை. நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியை எதிர்க்கவில்லை. எனது தொலைபேசியும் ஒட்டுக்கேட்கப்பட்டது. பல அமைச்சர்களும் இதையே சொல்வார்கள்" எனக் கூறியுள்ளார்.
பாஜக கூட்டணியில் உள்ள எம்.பி ஒருவர் தனது தொலைபேசியும் ஒட்டுக்கேட்கப்படுவதாகக் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.