காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு எம்.பியுமான ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக இன்று (29.09.2021) கேரளா சென்றுள்ளார். கேரள காங்கிரஸில் நிலவும் உட்கட்சி பிரச்சனையை தீர்ப்பதற்காகவே அவர் இந்தப் பயணத்தை முக்கியமாக மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மலப்புரத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், பிரதமர் மோடி இந்தியர்களுக்கிடையேயான உறவை முறிப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
ராகுல் காந்தி மலப்புரத்தில் ஆற்றிய உரை வருமாறு:
இன்று கேட்கப்படும் அரசியல் கேள்வி - இந்தியா என்றால் என்ன? சாவர்க்கர் போன்றவர்களைப் படித்தால், இந்தியா ஒரு புவியியல் என்பார்கள். அவர்கள் ஒரு பேனாவை எடுத்து, ஒரு வரைபடத்தை வரைந்து இது இந்தியா என்று கூறுகிறார்கள். இந்தக் கோட்டிற்கு வெளியே இருப்பது இந்தியா அல்ல. இந்தக் கோட்டிற்கு உள்ளே இருப்பது இந்தியா என்கிறார்கள்.
தற்போது ஒரு கேள்வியெழுகிறது. ஒரு வரைபடம் இருக்கிறது. ஆனால் அந்தப் பிரதேசத்தில் யாரும் இல்லை. நீங்கள் அங்கு இருப்பீர்களா?. கண்டிப்பாக மாட்டீர்கள். ஏனென்றால், அந்தப் பிரதேசத்தில் மக்கள் இல்லையென்றால், அந்தப் பிரதேசத்தை இந்தியா என்று நீங்கள் கூறமாட்டீர்கள். எனவே என்னைப் பொறுத்தவரை, இந்தியா என்பது இங்கு வாழும் மக்களே.
இந்தியா ஒரு பிரதேசம் என்று அவர்கள் கூறுகிறார்கள், இந்தியா என்பது மக்கள், உறவுகள் என்று நாங்கள் சொல்கிறோம். இது இந்து மற்றும் முஸ்லிம்களுக்கு இடையேயான உறவு; இந்து, முஸ்லிம் மற்றும் சீக்கியர்களுக்கிடையேயான உறவு; தமிழ், ஹிந்தி, உருது, பெங்காலி ஆகியவற்றுக்கு இடையேயான உறவு. பிரதமருடனான எனது பிரச்சனை என்னவென்றால், அவர் இந்த உறவுகளை முறிக்கிறார். அவர் இந்தியர்களுக்கிடையேயான உறவை உடைக்கிறார் என்றால், அவர் இந்தியா என்ற கருத்தியலைத் தாக்குகிறார். அதனால்தான் நான் அவரை எதிர்க்கிறேன். அதேபோல் அவர் இந்தியர்களுக்கிடையேயான உறவை உடைக்கும்போது இந்திய மக்களிடையே பாலத்தை உருவாக்குவது எனது பணியாகும், எனது கடமையாகும். அதற்கு நான் உறுதிபூண்டுள்ளேன்.
ஒவ்வொரு முறையும் இந்தியர்களுக்கிடையேயான பாலத்தை உடைக்க அவர் வெறுப்பைப் பயன்படுத்துகிறார். அந்தப் பாலத்தை மீண்டும் எழுப்ப அன்பைப் பயன்படுத்துவதே எனது வேலை. இது என்னுடைய வேலை மட்டுமல்ல, நம்முடைய வேலை. இந்த நாட்டின் பல்வேறு மரபுகள், பல்வேறு கருத்துகள், பல்வேறு மதங்கள், வெவ்வேறு கலாச்சாரங்கள் ஆகியவற்றைப் புரிந்துகொள்ளாமல் என்னால் ஒரு பாலத்தை உருவாக்க முடியாது".
இவ்வாறு ராகுல் காந்தி உரையாற்றினார்.