ஹத்ராஸ் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் சோதனை மாதிரிகள் 11 நாட்கள் கழித்து எடுக்கப்பட்டதால் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து உறுதிப்படுத்த முடியவில்லை என அலிகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தெரிவித்துள்ளது.
ஹத்ராஸில் 19 வயது இளம்பெண்ணை நான்கு பேர் சேர்ந்த கும்பல் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்ட பெண், இரண்டு வாரங்கள் உயிருக்குப் போராடி டெல்லி மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இதனைத் தொடர்ந்து நடந்த அடுத்தடுத்த சம்பவங்களும் மிகப்பெரிய சர்ச்சைகளாக வெடித்துள்ளன.
கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி நடைபெற்ற இந்தச் சம்பவத்திற்குப் பின்னர் ஹத்ராஸ் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட அப்பெண் அன்று இரவு மேல்சிகிச்சைக்காக அலிகர் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டார். அதன் பிறகு செப்டம்பர் 22 அன்று அப்பெண்ணிற்கு சற்றே நினைவு திரும்பியது.
அப்போது விசாரணை நடத்திய ஹத்ராஸ் போலீஸாரிடம் அப்பெண், தான் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து அப்பெண்ணிற்கு அலிகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோதனை நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். இதனைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் தடயவியல்துறை அறிக்கையில் கிடைக்கவில்லை என காவல்துறை தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் சோதனை மாதிரிகள் 11 நாட்கள் கழித்து எடுக்கப்பட்டதால் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து உறுதிப்படுத்த முடியவில்லை என அலிகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தெரிவித்துள்ளது. அக்கல்லூரியின் முதன்மை மருத்துவ அதிகாரியான டாக்டர்.அஜீம் மல்லிக் இதுகுறித்து கூறுகையில், ‘‘விதிகளின்படி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணின் மருத்துவ மாதிரிகள் 96 மணி நேரத்திற்குள் அனுப்பப்பட வேண்டும்.
ஆனால், இப்பெண்ணின் மாதிரிகள் 11 நாட்களுக்குப் பின் அனுப்பியதால் பலாத்காரத்திற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. இந்த தாமதத்தின் காரணாமாக மருத்துவ அறிக்கையில் எந்த பலனும் இல்லை.’’ எனத் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இளைஞர்களைத் தப்பிக்கவைக்கச் சதி நடப்பதாக ஏற்கனவே குற்றச்சாட்டுகள் எழுந்துவரும் சூழலில், மருத்துவமனை வெளியிட்டுள்ள இந்த தகவல் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.