வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைபொழிந்து வருகிறது. புயல் எச்சரிக்கை காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த எச்சரிக்கையை தொடர்ந்து தமிழக மீன்வளத்துறையும் எச்சரிக்கை கொடுத்திருந்தது. இருப்பினும் கடலூர் மாவட்டம் தையல் தோணித்துறை என்ற மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் 6 பேர் இரண்டு பைபர் படகில் நேற்று (27.11.2024) கடலுக்குச் சென்றனர். அப்போது கடல் சீற்றம் காரணமாகவும், காற்றின் வேகம் காரணமாகவும் படகுகள் கடலில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து கடலில் தத்தளித்த மீனவர்கள் தனியார் தொழிற்சாலைக்கான கப்பல் இறங்கு தளத்தில் ஏறி உயிர் தப்பினர்.
இது குறித்து தகவல் அறிந்த மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்களை அங்கிருந்து மீட்கும் முயற்சியில் இரண்டாவது நாளாக இன்று (28.11.2024) ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கடல் சீற்றம் காரணமாக மீனவர்களை மீட்பதில் சிக்கல் நீடிப்பதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் நடுக்கடலில் சிக்கித் தவிக்கும் மீனவர்களை மீட்பதற்காக ஹெலிகாப்டர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளது. சென்னையில் இருந்து கடலோர காவல் படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்த நிலையில் சிக்கிய மீனவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. தற்போது மீனவர்கள் அனைவரும் பத்திரமாக எதிர்பார்ப்பு மீட்கப்பட்டுள்ளனர் என தகவல் தோணித்துறை மீனவ கிராமத்தை நிம்மதிப் பெருமூச்சு விட வைத்துள்ளது.