புதுச்சேரி காமராஜ் நகர் குபேர் தெருவை சேர்ந்தவர் நிமிஷந்து ஜெயின்(50). இவர் வழுதாவூர் ரோடு கவுண்டம்பாளையம் பகுதியில் பைனான்ஸ் நடத்தி வருகிறார். நேற்று இவர் கடையில் இருந்தபோது கவுண்டம்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சக்திவேல்(42) என்பவர் ஒரு மோதிரத்தை அடகு வைக்க வந்தார்.
அதனை சோதனை செய்த நிமிஷந்த் ஜெயின் அது கவரிங் நகை என்பது தெரிய வந்தது. இதுகுறித்து அவர் கோரிமேடு காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். கோரிமேடு போலீஸ் தலைமை காவலர் ராஜி, போலீசார் ஜெயக்குமார், ஹரிபிரசாத், ராஜா ஆகியோர் அங்கு வந்தனர். போலீசார் வருவதை கண்ட சக்திவேல் தப்பி ஓட முயன்றார்.
உடனே அவரை காவலர்கள் மடக்கி பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் லாஸ்பேட்டை சுந்தரமூர்த்தி நகரை சேர்ந்த பத்தர் தொழில் செய்யும் ராஜா, திலாசுபேட்டையை சேர்ந்த பாப்ஸ்கோ ஊழியர் இளஞ்செழியன் ஆகியோர் சேர்ந்து பல்வேறு இடங்களில் போலி நகைகளை அடகு வைத்து பணம் வாங்கியது தெரியவந்தது. மேலும் அவரது நண்பரான திலாஸ்பேட்டையை சேர்ந்த பத்தர் வேலை செய்யும் ராஜா போலி நகைகளை தயார் செய்து இளஞ்செழியன், சக்திவேல் ஆகியோருடன் கொடுத்து அனுப்புவார்.
அதனை இருவரும் அடகு வைத்து பணத்தை மூன்று பேரும் பிரித்து எடுப்பது தெரியவந்தது. அன்று 2 கடைகளில் அடகு வைத்து விட்டு 3- வது கடையில் அடகு வைக்கும் போது மாட்டிக்கொண்டனர். கோரிமேடு போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட 8 பைனான்ஸ் கடைகளில் போலி நகைகளை அடகு வைத்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேர் மீதும் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன், உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள் கலையரசன், திருமுருகன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 17 ஆயிரம் பணமும், பத்தர் தொழில் செய்யும் சாதனங்கள் பறிமுதல் செய்தனர். அடகு வைத்த கவரிங் மோதிரங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.