உலகளவில் பங்குச்சந்தைகளில் நிலையற்றத்தன்மை காணப்பட்டாலும், நேற்று இந்தியப் பங்குச்சந்தைகளில் நிப்டி, சென்செக்ஸ் இரண்டுமே ஏற்றத்தில் வர்த்தகம் ஆயின. இன்றும் (ஜூன் 19) அதன் தொடர்ச்சி இருக்கும் என சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.
ரிலையன்ஸ் ஜியோவுக்கு அடுத்தடுத்த இடங்களில் உள்ள பார்தி ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய தொலைதொடர்பு நிறுவனங்கள், அரசுக்கு பகிர்வுத்தொகை செலுத்துதல் மற்றும் அவற்றின் சீர்செய்யப்பட்ட மொத்த வருவாய் (ஏஜிஆர்) தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அரசுக்கு பகிர்வுத் தொகை செலுத்துவதற்கு அவகாசம் வழங்கியது உச்சநீதிமன்றம். இதனால் டெலிகாம் நிறுவனங்களும், அவற்றுக்குக் கடன் வழங்கிய வங்கிகளும், நிதிசார் நிறுவனங்களும் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விட்டன.
இதையடுத்து நேற்று சென்செக்ஸ், நிப்டி இரண்டிலுமே வங்கிகள், நிதிச்சேவை நிறுவனங்களின் பங்குகள் நல்ல ஏற்றம் கண்டிருந்தன. டெலிகாம் நிறுவனங்களின் பங்குகளும் வர்த்தகத்தின் பிற்பகுதியில் பெரிய அளவில் சரிவைச் சந்திக்கவில்லை.
ஜியோஜித் நிதிச்சேவை நிறுவன ஆராய்ச்சிப்பிரிவுத் தலைவர் வினோத் நாயர், ''ஏ.ஜி.ஆர். மீதான வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய அவகாசம், வங்கிப் பங்குகள், தொலைதொடர்பு நிறுவனப் பங்குகளின் விலையேற்றத்துக்கு உதவும். அதனால்தான் வியாழக்கிழமை பங்குச்சந்தைகளில் கிட்டத்தட்ட அனைத்து வங்கிகளின் பங்குகளுமே நேர்மறை வளர்ச்சி கண்டிருந்தன. இப்போதுள்ள உலக அரசியல் நிலவரங்கள், அது தொடர்பான தகவல்கள் எல்லாமே குறிப்பிட்ட துறைகளின் பங்குகளில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். எனினும், எச்சரிக்கை தேவை,'' என்கிறார்.
ரேலிகர் பங்குத்தரகு நிறுவன துணைத்தலைவர் அஜித் மிஸ்ரா, இந்தியா- சீனா நாடுகளிடையே ஏற்பட்டுள்ள விவகாரம், அது தொடர்பாக உலகச்சந்தைகளில் இருந்து வரும் தகவல்களின் அடிப்படையில் வர்த்தகர்கள் பங்குகளைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும்,'' என்கிறார்.
கோட்டக் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் ஸ்ரீகாந்த் சவுகான், ''நிப்டி நீண்ட காலத்திற்கு 10,350 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம் ஆவதும் முதலீட்டாளர்களுக்கு ஒரு வகையில் பாதுகாப்பற்றதுதான். அந்நிலை தொடர்ந்தால், நிப்டியை கரடி மெல்ல மெல்ல கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடும்.
இப்போதுள்ள நிலையில் நிப்டி 10140 முதல் 10180 புள்ளிகள் வரை வர்த்தகம் ஆகிக் கொண்டிருக்கும்போதே பல வாரங்களின் அடிப்படையில் கையிருப்பில் உள்ள பங்குகளில் ஒரு பகுதியை விற்று லாபம் பார்த்துவிடுவது நல்லது,'' என முதலீட்டாளர்களுக்கு யோசனை சொல்கிறார்.
நிப்டியில் காளையின் ஆதிக்கம்:
கரோனா வைரஸின் இரண்டாம்கட்ட அலையால் அமெரிக்க, ஐரோப்பிய பங்குச்சந்தைகளில் லேசான சரிவு ஏற்பட்ட போதிலும், இந்தியாவில் நிப்டி ஓரளவு ஸ்திரமாக இருக்கிறது என்கிறார்கள். அடுத்த 20 நாள்களுக்கு நிப்டி, காளையின் பிடியில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், முதலீட்டாளர்களுக்கு ஓரளவு ஆதாயம் கிடைக்கும் என்கிறார்கள். நிப்டி குறைந்தபட்சமாக 9,800 புள்ளிகள் வரையிலும், அதிகபட்சமாக 10,300 புள்ளிகள் வரையிலும் செல்லக்கூடும் எனத் தெரிகிறது.
ஆதாயம் தரும் பங்குகள்:
பங்குச்சந்தையில் குறிப்பிட்ட பங்குகளில் கவனம் குவிதலும், விரிதலும் இயல்பானவை. நேற்றைய வர்த்தகத்தில் சில நிறுவனப் பங்குகள் பெரும் ஆதாயம் அளித்துள்ளன. அப்பங்குகளில் மேலும் முதலீடுகள் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி, பிஹெச்இஎல், ஆக்சிஸ் வங்கி, வேதாந்தா, ஐடிஐ, ஹெச்டிஎப்சி வங்கி, மேக்மானி ஆர்கானிக்ஸ், எம்எம்டிசி, மிஷ்ரா தாட்டு நிகாம், ஹிந்துஸ்தான் காப்பர், ஹெர்குலஸ் ஹாய்ஸ்ட்ஸ், பிஇஎம்எல், நவபாரத் வென்ச்சர்ஸ், ஸ்டார் பேப்பர் மில்ஸ், டி&லிங்க் (இண்டியா), இகரஷி மோட்டார்ஸ், சிட்டி யூனியன் வங்கி, ஜேகே லட்சுமி சிமெண்ட், இந்திரபிரஸ்தா, எம்எஸ்டிசி, ஆஸ்¢ட்ரால் பாலி டெக்னிக், ஜீனஸ் பேப்பர் அன்டு போர்ட்ஸ், எவரெஸ்ட் இண்டஸ்ட்ரீஸ், டிவி டுடே நெட்வொர்க், ஸ்கிப்பர், உகல் பியூயல் சிஸ்டம், ஹிந்துஸ்தான் மீடியா, பாக்யாநகர் பிராப்பர்டீஸ், ஜே குமார் இன்பிராபுராஜக்ட் ஆகிய பங்குகள் ஆதாயம் அளிக்கலாம் என சந்தை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டும் பங்குகள்:
ஐடிஐ, முத்தூட் பைனான்ஸ், வைபவ் குளோபல், ருச்சி சோயா இண்டஸ்ட்ரீஸ், அதானி கிரீன் எனர்ஜி ஆகிய பங்குகள் 52 வார உச்சத்தைத் தொட்டதால், அப்பங்குகளில் முதலீடு செய்ய வர்த்தகர்கள் அதிக ஆர்வம் செலுத்துகின்றனர்.
காளை செண்டிமென்ட்:
பிஎஸ்இயில் நேற்று வர்த்தகமான பங்குகளில் 464 பங்குகள் உச்ச விலையைத் தொட்டு, 500 புள்ளிகளைக் கடந்து வர்த்தகம் ஆனது. இதனால், முதலீட்டாளர்களிடையே காளையின் ஆதிக்கம் தொடரலாம் என்ற நம்பிக்கையும் நிலவுகிறது.