ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இஸ்லாமிய பிரிவான முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச், 'ஹிந்துஸ்தானி முதலில் ஹிந்துஸ்தான்' என்ற பெயரில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. இதில் கலந்துகொண்டு பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், இந்தியர்கள் அனைவருக்கும் ஓரே மரபணுதான் என தெரிவித்துள்ளார்.
மோகன் பகவத் பேசுகையில், "பிம்ப உருவாக்கத்துக்காகவோ, வாக்கு வங்கி அரசியலுக்காகவோ நான் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. கடந்த 40,000 ஆண்டுகளாக நாம் அனைவரும் ஒரே மூதாதையர்களின் வழி வந்தவர்கள் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இந்திய மக்கள் அனைவருக்கும் ஒரே மரபணுதான்" என்றார்.
தொடர்ந்து "இங்கு இஸ்லாமியர்கள் வாழக் கூடாது என ஒரு இந்து கூறுகிறார் என்றால், அவர் இந்து அல்ல. பசு ஒரு புனித விலங்குதான். ஆனால் மற்றவர்களைக் கொலை செய்பவர்கள் இந்துத்வாவிற்கு எதிராக செயல்படுபவர்களே. சட்டம் எந்தவித பாரபட்சமும் இல்லாமல் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவில் இஸ்லாமியர்கள் ஆபத்தில் இருக்கிறார்கள் என்ற அச்சத்தில் சிக்கிக்கொள்ளாதீர்கள்" என மோகன் பகவத் கூறினார்.
'நாம் ஜனநாயகத்தில் வாழ்கிறோம். இதில் இந்து அல்லது முஸ்லிம்களின் ஆதிக்கம் இருக்க முடியாது. இந்தியர்களின் ஆதிக்கம்தான் இருக்க வேண்டும்" எனவும், "இந்து - முஸ்லிம் பிரச்சனைக்குப் பேச்சுவார்த்தையே தீர்வு; முரண்பாடு தீர்வு அல்ல" எனவும் மோகன் பகவத் தனது உரையில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.