நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.
இந்த நிலையில், டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் முன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் தலைமையில் எம்.பி.க்கள் இன்று (08-04-24) 24 மணி நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டு போராட்டம் நடத்தினர். இது குறித்து எம்.பி.க்கள் பேசுகையில், ‘சி.பி.ஐ, அமலாக்கத்துறை, ஐ.டி, என்.ஐ.ஏ போன்ற விசாரணை அமைப்புகளை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துவதை தடுக்கவும்’ போராட்டத்தில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை வைத்தனர்.
மேலும், ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகள் அனைத்தும் பா.ஜ.கவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், விசாரணை அமைப்புகளால் தேர்தலின் மாண்பே சீர்குலைக்கப்படுவதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் குற்றச்சாட்டு வைத்தனர். இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் 2 தேர்தல் ஆணையர்களை சந்தித்து முறையிட்டு கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட எம்.பிக்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது