மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, குஜராத்தில் போதை மருந்துகள் மற்றும் சைக்கோட்ரோபிக் பொருட்களுக்கான ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு மையத்தை இன்று திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், இந்தியா மற்றொரு ஆபத்தைச் சந்தித்து வருவதாகவும், அதைத் தடுப்பது முக்கியம் எனவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், "பிரதமர் மோடி தலைமையில் இரண்டாவது முறை ஆட்சி அமைந்த போது, இந்த மையத்தை குஜராத்தின் தடய அறிவியல் பல்கலைக்கழகத்தோடு இணைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த பல்கலைக்கழகம் மற்ற மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும், தடய அறிவியலில் பங்களிக்க இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என்றும் எனக்கு நம்பிக்கையுள்ளது. நமக்கு யாரும் தேவையில்லை. இணையப் பாதுகாப்பு மற்றும் பேரியாட்ரிக் ஆராய்ச்சியில் நாம் சுயச்சார்பு அடைந்து வருகிறோம்" எனக் கூறியுள்ளார்.
மேலும் அமித்ஷா, " பிரதமர் மோடியின் கீழ், போதைப்பொருட்களை நம் நாட்டிற்குள் நுழைய விடமாட்டோம், போதைப்பொருட்களின் பாதையாக இந்தியாவை மாற விடமாட்டோம் என மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இந்தியா இன்னொரு ஆபத்தைச் சந்தித்து வருகிறது. அது போதைப்பொருள் பயங்கரவாதம். அதைத் தடுப்பது முக்கியம்" எனவும் தெரிவித்துள்ளார்.