ஆந்திரப் பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தலில் ஆட்சியில் இருந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்து தெலுங்கு தேசம் கூட்டணி அபார வெற்றி பெற்றிருந்தது. 175 தொகுதிகள் கொண்ட ஆந்திராவில், தெலுங்கு தேசம் கட்சி 135 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சிகளான ஜன சேனா கட்சி 21 இடங்களிலும், பா.ஜ.க 8 இடங்களிலும் வெற்றி பெற்றது. சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற சந்திரபாபு நாயுடு ஆந்திர முதல்வராக கடந்த 12ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார். இதன் மூலம், ஆந்திரப் பிரதேசத்தில் 4வது முறையாக சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவியேற்றுள்ளார்.
இதற்கிடையில், குண்டூர் மாவட்டம் தடேபள்ளியில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் கட்டப்பட்டு வந்தது. இந்த அலுவலகம் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளதாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்து நோட்டீஸ் அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இந்த நடவடிக்கைக்கு எதிராக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அலுவலகத்தை இடிக்க தடை விதித்து உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று (22-06-24) காலை 5 மணி அளவில், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அலுவலகத்தை ராட்சத பொக்லைன் எந்திரங்களை கொண்டு இடித்தனர். இந்த நடவடிக்கைக்கு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஜெகன் மோகன் ரெட்டி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது, “ஆந்திராவில் அரசியல் கட்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் மூலம் சந்திரபாபு தனது பழிவாங்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். கிட்டத்தட்ட ஒரு சர்வாதிகாரி புல்டோசர் மூலம் அழித்துள்ளார். இந்த ஐந்தாண்டு கால ஆட்சி எப்படி இருக்கப்போகிறது என்ற வன்முறை செய்தியை இந்தச் சம்பவத்தின் மூலம் கொடுத்துள்ளார். இந்த அச்சுறுத்தல்கள், இந்த வன்முறைச் செயல்கள் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸில் இல்லை. மக்களுக்காகக் கடுமையாகப் போராடுவோம். சந்திரபாபுவின் இச்செயல்களைக் கண்டிக்குமாறு நாட்டின் அனைத்து ஜனநாயகவாதிகளையும் கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.