ஒடிசா மாநிலம், சம்பல்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சினேகலதா(90). இவருக்கு சைரேந்திர தீட்சித்(62) என்ற மகளும், ஜெகநாத் என்ற மகனும் உள்ளனர். சினேகலதாவும் அவரது மகள் சைரேந்திர தீட்சித்தும் வீட்டின் முதல் தளத்தில் வசித்து வந்துள்ளனர். மகன் ஜெகநாத் தனது குடும்பத்துடன் தரை தளத்தில் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு நேரம் போல், சினேகலதா குடியிருந்த முதல் தளத்தில் தீப்பற்றி எரிந்துகொண்டிருந்தது. இதனை கண்ட அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர், உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து பார்த்த போது, சினேகலதா மற்றும் சைரேந்திர தீட்சித் ஆகியோரின் உடல்கள் தீயில் எரிந்த நிலையில் இருந்தது. இதனையடுத்து, அந்த இரு உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில், தீயில் கருகிய இருவரும், கொலை செய்யப்பட்டு உயிரிழந்துள்ளனர் என்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது. இதனையடுத்து, சந்தேகத்தின் பேரில் ஜெகநாத் மற்றும் சினேகலதாவின் பேரன் சங்கேத் ஆகியோரிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி தகவல் வெளியே வந்தது. அதில், சினேகலாதவின் குடும்பத்துக்குள் சொத்து தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஜெகநாத், தாய் சினேகலதாவையும், சகோதரி சைரேந்திர தீட்சித்தையும் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். அதன் பின்னர், அவர்களை தீயில் வைத்து எரித்துள்ளார் என்பது தெரியவந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.