கர்நாடகாவில் கடந்த மே மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று முதல்வராக சித்தராமையா பதவியேற்றார். இந்த நிலையில், காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையில் நேற்று முன்தினம் காங்கிரஸ் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய சித்தராமையா, “ தேசிய கல்விக் கொள்கை கர்நாடகாவில் பா.ஜ.க ஆட்சி காலத்தில் அமல்படுத்தப்பட்டது. இது, பா.ஜ.க ஆட்சி செய்யும் எந்த மாநிலத்திலும் அமல்படுத்தப்படவில்லை.
தேசிய கல்விக் கொள்கை முறையை அழிப்பதற்கான அனைத்தையும் நாம் கவனமாக தயார்படுத்த வேண்டும். அதனால், தேவையான சில தயாரிப்புகளைச் செய்த பிறகு தான் தேசிய கல்வி கொள்கை முறையை ஒழிக்க முடியும். இந்த ஆண்டு அந்த தயாரிப்புகளுக்கு போதுமான நேரம் இல்லை. கர்நாடகா மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வந்து காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் போது பள்ளிகளில் கல்வியாண்டு தொடங்கிவிட்டது.
இந்த கல்வியாண்டில் நடுப்பகுதியில் புதிய பாடத்தை புகுத்தினால் மாணவர்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்தும். அதனால், மாணவர்களின் தற்போதைய கல்விக்கு இடையூறு ஏற்படாத வகையில் இந்த கல்வி ஆண்டில் தேசிய கல்விக் கொள்கை முறை தொடரும். அடுத்த கல்வி ஆண்டு முதல் தேசிய கல்விக் கொள்கை முறை ரத்து செய்யப்படும். இந்திய அரசியலமைப்பின்படி தேசிய கல்விக் கொள்கையை மாற்றி மாநில கல்வி கொள்கை முறை அறிமுகப்படுத்தப்படும்” என்று கூறினார்.
இந்த நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர், “கல்வி என்பது முன்னேற்றத்தின் கலங்கரை விளக்கமாக இருக்க வேண்டுமே தவிர அரசியலின் பகடைக்காயாக இருக்கக்கூடாது. நமது கல்வி முறையில் மாற்றங்கள் தேவை. அதனால், பல்வேறு கட்ட ஆலோசனைகள், அனைத்து மக்களின் விருப்பங்கள் ஆகியவற்றை மனதில் வைத்து தான் தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. கர்நாடகா அரசின் இந்த முடிவு சீர்திருத்தத்துக்கு எதிரான செயல் ஆகும். கர்நாடகத்திற்கு முற்போக்கான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய தலைமை தேவையே தவிர அற்ப அரசியல் அல்ல. மாணவர்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு முதல் இடம் கொடுப்போம். அற்ப அரசியல் விளையாடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.