ரஷ்யா உக்ரைன் போர் விவகாரத்தில் அங்குள்ள தமிழ் மாணவர்களை மீட்க பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டது. உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை விரைந்து மீட்பது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் திமுக எம்.பி திருச்சி சிவா உள்ளிட்ட 10 பேர் கொண்ட தமிழக சிறப்பு குழு கடந்த 5 ஆம் தேதி சந்திப்பு மேற்கொண்டிருந்தது.
இந்நிலையில் உக்ரைனிலிருந்து தாயகம் வந்த மாணவர்களின் நிலை குறித்து திருச்சி சிவா, தம்பிதுரை ஆகியோர் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தனர். உக்ரைன் போர் குறித்த விவரங்கள் கொண்ட அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், எம்.பிக்களின் கேள்விக்கு பதிலளிகையில், ''உக்ரைனில் உள்ள சில பல்கலைக்கழகங்கள் தாயகம் திரும்பிய மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி வழங்க தயக்கம் காட்டுகின்றன. மாணவர்கள் படிப்பைத் தொடர மத்திய அரசு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும். தங்களின் படிப்பை விட்டுவிட்டு தாயகம் திரும்ப மாணவர்கள் தயக்கம் காட்டினர். போர் காரணமாக உக்ரைனில் மாணவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று இருந்த நேரத்தில் பெரும்பாலான மாணவர்கள் உக்ரைனில் இருக்கவே முடிவு செய்தனர். கடும் சவால்களுக்கு மத்தியில் உக்ரைனிலிருந்து 22,500 இந்தியர்களை பத்திரமாக மீட்டுவந்துள்ளோம். இந்தியர்களை மீட்பதும், அவர்களை பத்திரமாக அழைத்து வருவதும் சவாலாக இருந்தது'' என்றார்.