நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. ஏற்கனவே நடந்த பட்ஜெட் கூட்டத்தொடர் பல்வேறு பிரச்சினைகளால் கிட்டத்தட்ட முடங்கியது. இந்நிலையில் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி அடுத்த மாதம் 10 ஆம் தேதி வரை நடக்க இருக்கிறது. மொத்தம் 18 நாட்கள் நடக்கும் இந்த கூட்டத்தில், பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட இருக்கிறது.
முத்தலாக், அணை பாதுகாப்பு என்று 18 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு ஆர்வம் காட்டுகிறது. இதுமட்டுமல்லாமல், 2014 ஆம் ஆண்டில் இருந்து நிலுவையில் இருக்கும் 40க்கும் மேற்பட்ட மசோதாக்களை நிறைவேற்ற பாஜக அரசு தீவிரம் காட்டுகிறது. ஆனால், இதையெல்லாம் எதிர்க்கட்சிகள் நிறைவேற்றவிடுமா என்பது கேள்விக்குறிதான்.
அணைகள் பாதுகாப்பு மசோதாவுக்கு தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் அதை எதிர்த்துள்ளது. அதேபோல முத்தலாக் மசோதாவை சிறுபான்மையினருக்கு ஆதரவாக இருக்கும் காட்சிகள் எதிர்க்கின்றனர்.
இந்த நிலையில், மழைக்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து அனைத்துக்கட்சி கூட்டத்தை மத்திய அரசு நேற்று டெல்லியில் கூட்டி ஆலோசனை நடத்தியது.பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி அனந்த குமார், நாடாளுமன்ற மேல்சபை எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத், மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ஆனந்த் சர்மா (காங்கிரஸ்), சரத் பவார் (தேசியவாத காங்கிரஸ்), சீதாராம் யெச்சூரி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), டி.ராஜா (இந்திய கம்யூ) உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த மழைக்கால கூட்டத்தொடரில் பல அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெற இருக்கையில், பலரால் எதிர்பார்க்கப்படுவது தெலுங்கு தேசம் கட்சியால் கொண்டுவர இருக்கும் நம்பிக்கையில்லா தீர்மானம் தான். இந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்திற்கு இதுவரை 12 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மற்றவர்களையும் திரட்டும் முயற்சியில் தெலுங்கு தேசமும், காங்கிரஸும் ஈடுபட்டுள்ளன. இதுதான் மோடியின் கடைசி மழைக்கால கூட்டத்தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.