Skip to main content

ரேசன் கார்டுதாரர்களுக்கு அரிசிக்குப் பதிலாக பணம்! - முதல்வரின்  உத்தரவை  தள்ளுபடி செய்து தீர்ப்பு!

Published on 21/02/2020 | Edited on 21/02/2020

புதுச்சேரியில் அனைத்து ரேசன் கார்டுதாரர்களுக்கும், அரிசிக்குப் பதிலாக பணம் வழங்க வேண்டுமென துணைநிலை ஆளுநர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

புதுச்சேரியில் அனைத்து ரேசன் கார்டுதாரர்களுக்கும் அரிசிக்குப் பதிலாக பணம் வழங்க வேண்டுமென துணைநிலை ஆளுநர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி முதல்வர் நாராயணசாமி தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

 

 Money instead of rice for ration card holders! - Judge dismisses CM's order!

 

பொதுமக்களுக்கு இடையூறு இன்றி மாதந்தோறும் இலவச அரிசி வழங்க வேண்டும் என முதலமைச்சர் நாரயணசாமி வலியுறுத்தியிருந்த நிலையில், இலவச அரிசுக்குப் பதிலாக பணமாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தும்படி அம்மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை ஏற்று புதுவையில் அரிசிக்குப் பதில் பணம் வழங்க மத்திய அரசு உத்தரவிட்டது. மத்திய அரசின் இந்த உத்தரவை எதிர்த்து புதுவை முதல்வர் நாராயணசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி சி.வி.கார்த்திகேயேன் விசாரித்தார். விசாரணையின் போது, முதல்வர் நாராயணசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், அமைச்சரவை தீர்மானத்தை மீறி, துணைநிலை ஆளுநர் செயல்படுவதாகவும், இலவச அரிசி வழங்கும் திட்டத்தை தடுக்கக் கூடாது எனவும் உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.
மேலும் துணைநிலை ஆளுநரின் உத்தரவு குறித்து, மத்திய உணவுத் துறை அமைச்சரிடம் விவரங்கள் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளதால், துணைநிலை ஆளுநர் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும் வாதிட்டிருந்தார்.

மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், இந்த வழக்கை தாக்கல் செய்ய முதல்வருக்கு அடிப்படை உரிமையில்லை எனவும், யூனியன் பிரதேச சட்டப்பிரிவுகளின்படி, மத்திய அரசின் உத்தரவுக்கு யூனியன் பிரதேச அரசு கட்டுப்பட வேண்டும் எனவும் வாதிட்டிருந்தார்.

மேலும், யூனியன் பிரசதேசத்தின் முதல்வர், மத்திய அரசுக்கு எதிராக வழக்கு தொடர உரிமையில்லை எனவும், மக்கள் அரிசிக்குப் பதிலாக பணத்தைப்  பெறுவதைத் தடுக்கும் உள் நோக்கத்திலேயே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டியிருந்தார்.

அதுபோல, துணைநிலை ஆளுநர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், மத்திய அரசின் நேரடி பணப்பட்டுவாடா சட்டவிதிகளை ஏற்று விதிகளை வகுத்த புதுச்சேரி அரசு, தற்போது அதை மீறி செயல்பட முடியாது என வாதிட்டிருந்தார்.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், அரிசிக்குப் பதில் பணம் வழங்கலாமா என்பது குறித்த பிரச்சனையில், குடியரசுத் தலைவர் அறிவுறுத்தல்படி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளதால், அதற்கு புதுச்சேரி அரசு கட்டுப்பட வேண்டும் எனக் கூறி, துணைநிலை ஆளுநரின் உத்தரவை உறுதி செய்து, முதல்வர் நாராயணசாமியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

 

 

சார்ந்த செய்திகள்