இந்தியாவில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டை விட கரோனா பரவும் வேகம் அதிகமாக உள்ளது. கரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நேற்று (21.04.20210) ஒரேநாளில் 3 லட்சத்து 14 ஆயிரத்து 835 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. ஒரேநாளில் மூன்று லட்சம் பேருக்கு கரோனா உறுதியாவது இந்தியாவில் இது முதல்முறையாகும்.
கர்நாடகா, மகாராஷ்டிரா, டெல்லி, உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில், மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், உறவினர்களே அவற்றை தனியார் நிறுவனங்களில் இருந்து கொள்முதல் செய்து கொடுக்கின்றனர். அப்படியிருந்தும், பல இடங்களில் தட்டுப்பாடு இருப்பதால், ஒவ்வொருவரும் ‘மூச்சை’க் கையில் பிடித்துக் கொண்டு, உயிருக்குப் போராடி வருகின்றனர்.
நாடுமுழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவிவரும் நிலையில் இன்று மத்திய அரசின் உயர் அதிகாரிகளுடன் நடந்த கூட்டத்தில் நாடு முழுவதும் ஆக்சிஜன் உற்பத்தியை உடனடியாக அதிகரிக்க அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். அதேபோல் தேர்தல் பிரச்சாரத்திற்காக நாளை மேற்குவங்கம் செல்ல இருந்த பிரதமர் மோடி, தனது பிரச்சாரப் பயணத்தை ரத்து செய்துள்ளார். கரோனா நிலை குறித்து நாளை உயர்மட்டக் குழுக் கூட்டத்தை நடத்த இருப்பதால், நாளை மேற்கு வங்கத்திற்குச் செல்லவில்லை என மோடி அறிவித்துள்ளார்.
இந்நிலையில் கரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநில முதல்வர்களுடன் கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி நாளை ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். நாளை காலை 9 மணிக்கு கரோனா பாதிப்பு தொடர்பாக ஆய்வுக்கூட்டமும், நண்பகல் 12.30 மணிக்கு ஆக்சிஜன் உற்பத்தியாளர்களுடனும் ஆலோசிக்கவும் இருக்கிறார் பிரதமர்.