தெலுங்கானா மாநிலத்தில் அடுத்த மாதம்(நவம்பர் 30) சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தற்போது, தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் காங்கிரஸ், பாஜக மற்றும், சந்திரகேசர் ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஆகிய கட்சிகள் படு தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன . தெலுங்கானா தேர்தலில் மும்முனை போட்டி நிலவுவதால், அரசியல் கட்சித் தலைவர்கள் மாறி மாறி விமர்சனங்களையும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். சந்திரசேகர ராவின் டி.ஆர்.எஸ் கட்சிக்கும் பாஜகவிற்கு ஆகவே ஆகாது என்று கூறி வந்தாலும், பாஜகவின் பி டீம் டி.ஆர்.எஸ் கட்சி என்று பிரச்சாரத்திற்குச் செல்லும் வழியெங்கும் கூறி வருகிறது காங்கிரஸ்.
இந்த நிலையில் அண்டை மாநிலமான கர்நாடகாவில் காங்கிரஸ் பெற்ற வெற்றி தெலுங்கானா காங்கிரசார்களிடையே பலத்த உற்சாகத்தையும் அளித்துள்ளது. அதே உற்சாகத்துடன் தெலுங்கான தேர்தலில் வெல்ல வாக்குறுதிகளையும், அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது. மொத்தமுள்ள 119 தொகுதிகளில் முதற்கட்டமாக 55 வேட்பாளர்கள் பட்டியலைக் காங்கிரஸ் வெளியிட்ட நிலையில் நேற்று 45 வேட்பாளர்கள் கொண்ட இரண்டாவது பட்டியலைக் காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.
அதில், முக்கியமாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீனுக்கு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக உத்தரப்பிரதேசத்தின் மொராதாபாத் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது, தெலுங்கானா மாநிலம் ஜூபிலி ஹில்ஸ் தொகுதியில் போட்டியிடக் காங்கிரஸ் தலைமை முகமது அசாருதீனுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளது. இந்த வாய்ப்பை தமக்கு வழங்கியதற்காக முகமது அசாருதீன் காங்கிரஸ் கட்சித் தலைவர், மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.