இந்தியாவில் இதுவரை 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் வருகிறது. இந்தநிலையில் டெல்லி உயர்நீதிமன்றத்தில், 12-17 வயதிற்கு உட்பட்டவர்களுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் தடுப்பூசி செலுத்தவதில் முன்னுரிமை அளிக்கக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்தநிலையில் இன்று இந்த வழக்கில், மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. அதில் குழந்தைகள் மீதான கரோனா தடுப்பூசி பரிசோதனை முடியும் தருவாயை எட்டியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த உரிய ஆணையங்கள் அனுமதியளித்ததும், குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான கொள்கை உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படும் என மத்திய அரசு கூறியுள்ளது.
மேலும் ஸைடஸ் காடிலா, தனது தடுப்பூசியை கொண்டு குழந்தைகள் மீதான சோதனையை நடத்தி முடித்துள்ளதாகவும், தற்போது அந்த தடுப்பூசி தலைமை மருந்து கட்டுப்பட்டாளரின் அனுமதிக்காக காத்திருப்பதாகவும் கூறியுள்ள மத்திய அரசு, அந்த தடுப்பூசி விரைவில் பயன்பாட்டிற்கு வரலாம் எனவும் கூறியுள்ளது.