ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசின் பட்ஜெட் புத்தகங்கள் அச்சடிக்கும் முன்பாக அல்வா தயாரிக்கும் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. மத்திய அரசு செயலகத்தில் உள்ள நார்த் ப்ளாக்கில் உள்ள நிதி அமைச்சகத்தில் அல்வா கிண்டப்படுவது வழக்கம். அந்த அல்வாவை மத்திய பட்ஜெட் தயாரிப்பு பணியில் ஈடுபட உள்ள ஊழியர்களுக்கு மத்திய நிதி அமைச்சராக இருப்பவர் அல்வா வழங்குவார். அதன் தொடர்ச்சியாக 2019-2020 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் ஜூலை 5- ஆம் தேதி மத்திய நிதி துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார்.
பட்ஜெட்டில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்து கருத்துக்களை தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நேற்று டெல்லியில் நடைபெற்ற மாநில நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் பட்ஜெட் குறித்து விவாதித்தார் நிதி துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன். 2019-2020 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் தயார் என்ற செய்தியை மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் "அல்வா கிண்டும் நிகழ்ச்சி" நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மத்திய பட்ஜெட்டை தயாரிக்கும் பணியில் உள்ள ஊழியர்கள், நிதித்துறை அதிகாரிகள், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இணையமைச்சர் அனுராக் தாகூர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதன் பிறகு தயார் செய்த அல்வாவை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிகாரிகளுக்கு வழங்கினார். இன்று (22/06/2019) முதல் 2019-2020 ஆம் ஆண்டிற்கான மத்திய அரசின் பட்ஜெட் புத்தகங்கள் தயாரிக்கும் பணிகள் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.