காஷ்மீர் வளர்ச்சிக்காகவே சிறப்பு அந்தஸ்த்து வழங்கும் 370ஆவது பிரிவை நீக்கியதாக தேர்தல் அரசியல் செய்யும் மோடி, அரசியல் சட்டம் 47 ஆவது பிரிவு சொல்வதை சரியாக செய்திருக்கிறாரா? அதைச் சரியாக செய்திருந்தால் 93 சதவீதம் குழந்தைகள் சத்துணவு பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டிருக்குமா? என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபல் காட்டமாக கேட்டிருக்கிறார்.
ஹரியானா தேர்தலுக்காக ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்த்து குறித்து மோடி பேசுகிறார். ஆனால், பாகிஸ்தானின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்த காஷ்மீரை பிரித்து இந்தியாவுடன் சேர்த்தது காங்கிரஸ்தான் என்ற உண்மையை சொல்வாரா? காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்தபோது மோடி எங்கே இருந்தார். காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்தது காங்கிரஸ்தான் என்ற உண்மையை சொல்லும் தைரியம் மோடிக்கு இருக்கிறதா?
காஷ்மீர் வளர்ச்சிக்காகவே 370 ஆவது பிரிவை நீக்கியதாக சொல்லும் மோடி, அரசியல் சட்டம் 47 ஆவது பிரிவு என்ன சொல்கிறது என்பதை அறிவாரா? அந்தப் பிரிவு மாநிலங்களில் வசிக்கும் மக்களின் பொது சுகாதார வசதிகளையும், வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்துவதும் சத்துணவு வினியோகத்தை அதிகரிப்பதையும் மத்திய அரசு முறையாக நிர்வகிக்க வேண்டும் என்று சொல்கிறது.
இதை ஒழுங்காக நிர்வகித்திருந்தால் 93 சதவீதம் குழந்தைகள் சத்துணவுக் குறைபாடால் பாதிக்கப்பட்டிருக்காது. மோடிக்கு தெரிந்ததெல்லாம் 370 மட்டும்தான். 47 ஆவது பிரிவு என்னவென்று தெரியாது.
ஹரியானா, மகாராஸ்டிரா, உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் பிரசவத்தில் குழந்தைகள் இறப்பு விகிதம், வேலையின்மை விகிதம் அதிகரித்திருப்பதையும், உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை விகிதம் குறைந்திருப்பதையும், மனிதவள மேம்பாடு புள்ளிவிவரம் குறைந்திருப்பதையும் மறைக்க காஷ்மீரை பயன்படுத்துகிறார் மோடி என்று கடுமையாக விமர்சித்திருக்கிறார் கபில் சிபல்.