புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி இன்று (20.08.2020) வெளியிட்டுள்ள வீடியோ செய்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரியில் தற்போது 1796 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு மருத்துவமனைகளில் 300- க்கும் மேற்பட்ட படுக்கைகள் வழங்கிய நிலையில், அரியூர் பகுதியில் அமைந்துள்ள வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரியில் படுக்கைகள் வழங்க மறுத்ததால் பேரிடர் மீட்புத் துறை சார்பாக மருத்துவமனை எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
செவ்வாய்கிழமை ஊரடங்கு பிறப்பித்தும் கரோனா நோய்த் தொற்று குறையவில்லை. நோயைத் தடுக்க சுகாதாரத் துறை, காவல்துறை, உள்ளாட்சி துறை என பலரும் கடுமையான பாடுபடுகிறார். இந்த வேளையில் துணைநிலை ஆளுநர் மத்திய குழுவை அனுப்ப கோரியுள்ளார். கரோனா நோய், புதுச்சேரியில் மட்டுமல்லாது பல மாநிலங்களையும் பாதித்துள்ளது. தனது அலுவலகத்தில் உட்கார்ந்து கொண்டு உத்தரவு போட்டால் மட்டும் போதாது.
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பொதுவெளியில் விநாயகர் சிலைகள் அமைத்தால் மக்கள் அதிகம் கூட நேரிடும். இதனால் நோய்த் தொற்றுக்கு அதிகம் வாய்ப்பு உள்ளதால் புதுச்சேரி மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது. ஆகவே தயவு செய்து விநாயகர் சிலையை வீட்டில் அமைத்து வழிபடுங்கள், கோயிலுக்குச் சென்று வழிபடுங்கள், எனக்கும் இறை நம்பிக்கை உள்ளது. நானும் கோயிலுக்குச் சென்று வழிபட்டு வருகின்றேன். ஆகவே நோய்த் தொற்றைக் கருத்தில் கொண்டு விநாயகர் சிலைகளைப் பொது இடத்தில் வைக்கவோ, ஊர்வலமாகக் கொண்டு செல்லவோ கூடாது. பொதுமக்கள் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும்.
விஷமிகளின் சதியை முறியடிக்கும் வகையில் ராகுல்காந்தி மீண்டும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ஏற்க வேண்டும். தனது எண்ணத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று ராஜீவ்காந்தி பிறந்தநாளில் கோரிக்கையாக வைக்கிறேன்". இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.