இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படும் தேசிய மருத்துவர்கள் தினத்திற்கு, பிறந்தார் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சுதந்திரப்போராட்ட வீரரும், மேற்குவங்க முன்னாள் முதல்வருமான பிதான் சந்திர ராய் நினைவாக ஆண்டுதோறும் ஜூலை ஒன்றாம் தேதி மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. சுதந்திரப்போராட்டம் மற்றும் அதன் பிந்தைய காலங்களில் ஏழை மக்களுக்கு இலவச மருத்துவம் பார்த்ததோடு, தனது ஆட்சிக்காலத்தில் எளிய மக்களுக்காகப் பல மருத்துவமனைகளையும் தொடங்கினார். அவரது சேவையை போற்றும் விதமாக, அவரது பிறந்த தினம் தேசிய மருத்துவர்கள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று கொண்டாடப்படும் மருத்துவர்கள் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, "கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் உற்சாகமாக முன் களத்தில் நின்று சேவை புரியும் நமது மருத்துவர்களுக்கு இந்தியா வணக்கம் செலுத்துகிறது" எனத் தெரிவித்துள்ளார். அதுபோல உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "மருத்துவர்கள் தினத்தன்று, கரோனாவுக்கு எதிரான போரில் முன்னணியில் இருக்கும் நமது துணிச்சலான மருத்துவர்களுக்கு, நான் வணக்கம் செலுத்துகிறேன். இந்த சவாலான காலங்களில் தேசத்தைப் பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாக வைத்திருக்கவும் அவர்களின் முழு அர்ப்பணிப்பு உண்மையிலேயே போற்றுதலுக்குரியது. தேசம் அவர்களின் கடமை உணர்வுக்கும், தியாகத்திற்கும் வணக்கம் செலுத்துகிறது" எனத் தெரிவித்துள்ளார்.