இந்தியாவின் 75வது சுதந்திர தினம் ‘அம்ரித் மகோத்சவ்’ என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. இந்தக் கொண்டாட்டத்தின் தொடக்கமாக, குஜராத்தின் சபர்மதி ஆசிரமத்திலிருந்து தண்டிக்கு நடைப்பயணத்தைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மகாத்மா காந்தியின் தண்டி யாத்திரையை நினைவுபடுத்தும் விதமாக இந்த நடைப்பயணத்தைப் பிரதமர் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக சபர்மதி ஆசிரமத்தில் பிரதமர் மோடி, மகாத்மா காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினார்.
இந்த யாத்திரையை தொடங்கி வைப்பதற்கு முன்பு மொரார்ஜி தேசாயின் நினைவிடத்தில், சுதந்திர தின கொண்டாட்டங்களை தொடங்கி வைக்கும் விதமாக மோடி உரையாற்றினார்.
பிரதமர் மோடி ஆற்றிய உரை:
இன்று (12.03.2021) அம்ரித் மகோத்சவின் முதல் நாள். இந்த மஹோத்சவ், 2022 ஆகஸ்ட் 15 ஆம் தேதியின் 75 வாரங்களுக்கு முன்பு தொடங்கி 2023 ஆகஸ்ட் 15 வரை நடைபெறும். விடுதலை போராட்டம் - சுதந்திரமடைந்த 75 ஆண்டுகளின் கருத்தாக்கங்கள், சாதனைகள், செயல்கள் மற்றும் தீர்மானங்கள் ஆகிய ஐந்து தூண்கள், நாடு முன்னோக்கி செல்ல ஊக்குவிக்கும்.
லோகமான்ய திலகரின் பூர்ண சுதந்திர முழக்கம், இந்திய தேசிய இராணுவத்தின் டெல்லி சாலோ முழக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகியவற்றை தேசம் ஒருபோதும் மறக்காது. மங்கல் பாண்டே, தந்தியா தோப், ராணி லக்ஷ்மி பாய், சந்திரசேகர் ஆசாத், பகத் சிங், பண்டிதர் நேரு, அம்பேத்கர் உள்ளிட்டோரிடமிருந்து உத்வேகத்தை நாம் எடுத்துக்கொள்கிறோம். தடுப்பூசி உற்பத்தியில் இந்தியாவின் சுயசார்பு, முழு உலகிற்கும் பயனளிக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் சாதனைகள் இன்று நம்முடையது மட்டுமல்ல. அவை முழு உலகிற்கும் வெளிச்சத்தைக் காட்டப் போகின்றன.
இவ்வாறு மோடி உரை நிகழ்த்தினார்.