Skip to main content

கொள்ளையடிக்க காரில் சென்ற கும்பல்;5பேருடன் ஆயுதங்கள் பறிமுதல்!

Published on 12/12/2018 | Edited on 13/12/2018

புதுச்சேரி  வடக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்ற ஜிந்தா கோதண்டராமன்  போலீசாரை தீவிரமாக ரோந்து சென்று குற்றங்கள் நடைபெறாமல் இருக்க உத்தரவிட்டார். இதையடுத்து வடக்கு பகுதிக்கு உட்பட்ட போலீசார்கள் அனைவரும் தினமும் தீவிர ரோந்து சென்று வந்தனர். 

 

இந்த நிலையில் வடக்குபகுதி எஸ்.பி. தலைமையிலான குற்றப்பிரிவு போலீசாருக்கு  காரில் ஆயுதங்களுடன் ஒரு கும்பல் சுற்றுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்களும்  மேட்டுப்பாளையம் சப்- இன்ஸ்பெக்டர்கள் இனியன், குமார் ஆகியோர் தலைமையிலான குற்றப்பிரிவு போலிசாரும் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அந்த கும்பல் மேட்டுப்பாளையம் வழியாக வருவதாக அறிந்தனர். இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அங்கு மேட்டுப்பாளையம் கால்நடை ஆஸ்பத்திரி அருகே ஒரு கார் வேகமாக வந்து கொண்டிருந்தது. இதையடுத்து போலீசார் அந்த காரை நிறுத்த முயற்சி செய்தனர். ஆனால் கார் நிற்காமல் சென்றதால் அதேபகுதியில் நின்ற மற்ற போலீசார் தங்கள் மோட்டார் சைக்கிளை குறுக்கே நிறுத்தினர். இதையடுத்து அந்த கார் நின்றது. உடனே போலீசார் அந்த காரை சுற்றி வளைத்தனர். 

 

police

 

காரினுள் 5 பேர் இருந்தனர். காரை சோதனை செய்தபோது கத்தி மற்றும் இரும்பு ராடுகள் இருந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 5 பேரையும், காரையும் மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு வைத்து அவர்களிடம் விசாரித்தபோது அவர்கள் சண்முகபுரம் வடக்கு பாரதிபுரத்தை சேர்ந்த மார்ட்டின்(26), சுரேஷ்(24), வாணரபேட்டையை சேர்ந்த ஸ்டீபன்ராஜ்(25), மூலங்குளம் மோதிலால் நகரை சேர்ந்த தமிழ்வாணன்(26), வில்லியனூர் மணவெளி பாலாஜி நகரை சேர்ந்த மாணிக்கம்(24) ஆகியோர் என்பது தெரியவந்தது. இவர்கள் அனைவரும் ஜ.ஆர்.பி.என். போலீஸ் கோபி கொலைவழக்கில் கைது செய்யப்பட்ட ராமுவின் கூட்டாளிகள் என்பது தெரியவந்தது. அனைவரும் கூட்டாக கொள்ளையடிக்கும் நோக்கில் காரில் சுற்றியதும் தெரியவந்தது. 

 

 

இதையடுத்து அவர்கள் 5 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 1 கத்தி, 3 இரும்பு ராடுகள், 5 செல்போன்கள், அவர்கள் ஓட்டி வந்த கார், ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் மார்ட்டின் மீது ஜ.ஆர்.பி.என். கோபி  கொலை வழக்கும் தற்போது அவன்மீது பிடிவாரண்டும் உள்ளது.  ஸ்டீபன் ராஜ், தமிழ்வாணன் ஆகிய இருவர் மீதும் வழக்குகள் உள்ளன. 

 

கொள்ளை நடக்கும் முன்பே  குற்றவாளிகளை பிடித்த போலீசாரை வடக்கு எஸ்.பி. ஜிந்தா கோதண்டராமன் பாராட்டினார்.

சார்ந்த செய்திகள்