
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2018 ஆம் ஆண்டு தேர்தல் பத்திரம் திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்தத் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. அதே சமயம் அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலமாக நிதியைப் பெறுவது என்ற திட்டத்தை எதிர்த்து ஏ.டி.ஆர்., காமன் கேஸ் உள்ளிட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உச்சநீதிமன்றத்தில் 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி (15.02.2024) தீர்ப்பு வழங்கியது.
அதில் 5 நீதிபதிகளும் தேர்தல் பத்திரங்கள் செல்லாது என ஒருமித்த கருத்துகளைத் தீர்ப்பாக வழங்கினர். மேலும் மார்ச் 6 ஆம் தேதிக்குள் நன்கொடை தொடர்பாகத் தேர்தல் ஆணையத்திடம், பாரத் ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.) விவரங்களை அளிக்க வேண்டும். மேலும், அதனை மார்ச் 31 ஆம் தேதிக்குள் இணையப் பக்கத்தில் தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் எனவும் நீதிபதிகள் தீர்ப்பளித்திருந்தனர். ஆனால் தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு வழங்க ஜூன் 30 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்க வேண்டும் என எஸ்.பி.ஐ. வங்கி உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தது.
இதுதொடர்பாக எஸ்.பி.ஐ. வங்கி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் (11.03.2024) நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையில், எஸ்.பி.ஐ. வங்கிக்கு பல்வேறு கேள்விகளை நீதிமன்றம் வைத்திருந்தது. அதாவது, ‘26 நாட்கள் ஆகிறது இதுவரை என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?. எஸ்.பி.ஐ. வங்கியால் செய்ய முடியாத வேலையை எதுவும் நாங்கள் கொடுக்கவில்லை. எஸ்.பி.ஐ. வங்கியிடம் இருந்து நேர்மையான செயல்பாட்டை நாங்கள் எதிர்நோக்குகிறோம்’ எனத் தெரிவித்திருந்தது. மார்ச் 12 ஆம் தேதி மாலைக்குள் விவரங்களை எஸ்.பி.ஐ வெளியிடவும், மார்ச் 15 ஆம் தேதிக்குள் எஸ்.பி.ஐ. வங்கியிடம் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான ஆவணங்களைப் பெற்று வெளியிடத் தேர்தல் ஆணையத்திற்கும் உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து, தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் எஸ்.பி.ஐ. வங்கி நேற்று (12-03-24) வழங்கியது.

அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் 2019 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை 22 ஆயிரத்து 217 தேர்தல் பத்திரங்கள் விற்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில், எஸ்.பி.ஐ வங்கி இன்று (13-03-24) பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருந்தது. அதில், 22 ஆயிரத்து 30 தேர்தல் பத்திரங்கள் பணமாக்கப்பட்டுள்ளது என்றும் 187 தேர்தல் பத்திரங்கள் பணமாக்கப்படவில்லை என்றும் கூறியது. மேலும், தேர்தல் பத்திரங்களை வாங்கியவர்கள், வாங்கிய தேதி, வாங்கிய தொகை ஆகியவை விவரங்களாகத் தேர்தல் ஆணையத்தில் பட்டியலிடப்பட்டுள்ளதாகவும், அவை அனைத்தும் பென் டிரைவ் வடிவில் அளிக்கப்பட்டதாகவும் எஸ்.பி.ஐ. வங்கி சார்பில் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மக்களவைத் தேர்தலுக்கான ஆயத்த பணிகள் குறித்து இன்று (13.03.2024) ஆய்வு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “ஜம்மு மற்றும் காஷ்மீரில் தேர்தல்களை அமைதியாகவும், அதிகபட்ச பங்கேற்புடனும் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் முழுமையாக கடமைப்பட்டுள்ளது. பா.ஜ.க., சி.பி.எம்., காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளையும், மாநில அங்கீகாரம் பெற்ற என்.சி, பி.டி.பி. போன்ற கட்சிகளையும் சந்தித்து ஆலோசனை நடத்தினோம். தேர்தல்கள் முற்றிலும் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் இருக்க வேண்டும். பாரபட்சம் இல்லாமல் இருக்க வேண்டும், அரசு நிர்வாகம் ஒருதலைபட்சமாக செயல்படலாம். எனவே சம நிலை ஏற்படுத்தப்பட வேண்டும் என்று சில கட்சிகள் கருத்து தெரிவித்தன. விரைவில் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் விரும்பினர். அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஒரே மாதிரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்க வேண்டும் என்று சில கட்சிகள் கூறியுள்ளன. புலம்பெயர்ந்தோர் எங்கிருந்தாலும் அவர்கள் முறையாக வாக்களிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சில அரசியல் கட்சிகளிடமிருந்து கோரிக்கை எழுந்தது” எனத் தெரிவித்தார். மேலும் தேர்தல் பத்திரங்கள் விவகாரம் குறித்துப் பேசுகையில், “எஸ்.பி.ஐ. வங்கி அளித்துள்ள தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்கள் உரிய நேரத்தில் தேர்தல் ஆணையம் சார்பில் வெளியிடப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.