புதுச்சேரி வைசியால் வீதியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, "கரோனாவிலிருந்து புதுச்சேரி மக்களை காப்பதற்காக புதுச்சேரிக்கு மத்திய அரசு மருத்துவ உதவிகளையும், மக்களின் வாழ்வாதாரத்திற்குத் தேவையான உதவிகளையும் செய்ய வேண்டுமென பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளேன். புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சியின் போது மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, கரோனாவை கட்டுக்குள் வைத்திருந்தோம். ஆனால் தற்போதுள்ள துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அதிகாரிகளை கூட்டி ஆலோசனை மட்டுமே நடத்துகிறார். முகாமிற்குச் சென்று புகைப்படம் எடுத்து விளம்பரம் தேடிக் கொள்கிறார். துணைநிலை ஆளுநர் அரசியல் கட்சிகளைக் குறை கூறுவதை தவிர்த்து, களத்தில் இறங்கி பணியாற்ற வேண்டும்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி முறைகேடுகளில் ஈடுபடுவதற்கு வாய்ப்பிருப்பதால், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதிகளில் 'ஜாமர்' கருவியைப் பொருத்த வேண்டும் என காங்கிரஸ் சார்பில் புதுச்சேரி தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் முறையிடப்பட்டுள்ளது'' இவ்வாறு நாராயணசாமி கூறினார்.