கர்நாடக மாநில துணை முதல்வரும் நீர்ப்பாசனத் துறை அமைச்சருமான டி.கே.சிவகுமார் தமிழகத்திற்கு காவிரி நீரை தர முடியாது, மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று சமீபத்தில் தெரிவித்து இருந்தார். இவரின் இந்த கருத்துக்கு தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக நேற்று முன்தினம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் மேகதாது விவகாரம் தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை அவரது இல்லத்தில் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சந்தித்து பேசினார்.
அப்போது, காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்ட மத்திய அரசு அனுமதி தரக்கூடாது. தமிழகத்திற்கு ஜூன் மாதத்திற்கான நீரை கர்நாடகா விரைந்து திறந்து விட அறிவுறுத்த வேண்டும். காவிரியில் தண்ணீர் திறந்து விடவில்லையென்றால் டெல்டாவில் உள்ள பயிர்கள் எல்லாம் உலர்ந்து போய்விடும் என்று தெரிவித்துள்ளார்.