மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக அரசியல் களம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பாஜக ஆதரவுடன் செயல்பட்டு வரும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான ஆளும் அரசைக் கண்டித்து உத்தவ் தாக்கரே பல்வேறு போராட்டங்கள் முன்னெடுத்து வருகிறார். இதில் பல இடங்களில் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தொண்டர்களும் இணைந்து போராட்டத்தில் கலந்துகொண்டு வருகிறார்கள்.
இதற்கிடையே நேற்று மகாராஷ்டிரா மாநிலத்தில் முன் எப்போதும் இல்லாத வகையில் அம்மாநில ஆளுநர் கோஷாரியாவை கண்டித்து மிகப்பெரிய பேரணி நடைபெற்றது. உத்தவ் தாக்கரே தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொண்டார்கள். இதில் சரத்பவார் உள்ளிட்ட தலைவர்களும் கலந்துகொண்டார்கள்.
இந்நிலையில் இன்று பலத்த எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் அம்மாநில சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சரோஜ் அகிரா தனது இரண்டு மாத கைக்குழந்தையைத் தூக்கிக்கொண்டு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கலந்துகொள்ள வந்தார். இந்த சம்பவம் அங்கிருந்தவர்களை ஆச்சரியப்படுத்தியது.