உத்தரப்பிரதேச மாநிலத்தில், நேபாள எல்லையில் அமைந்துள்ளது சித்தார்த் நகர் மாவட்டம். இந்த மாவட்டத்தைச் சேர்ந்த 18 பேருக்கு கடந்த ஏப்ரல் முதல் வாரத்தில், அம்மாவட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன்பிறகு அந்த 18 பேரும் தடுப்பூசியின் இரண்டாவது டோஸை செலுத்திக்கொள்ள மே 14 அன்று ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் சென்றுள்ளனர். அங்கு அவர்களுக்கு கோவிஷீல்டின் இரண்டாவது டோஸுக்கு பதிலாக தவறுதலாக கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இது அந்த சமயத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தநிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்), நடந்த தவறை ஆராய்ச்சியாக மாற்ற முடிவு செய்தது. இதனையடுத்து, தடுப்பூசியை மாற்றி செலுத்திக்கொண்ட 18 பேரோடு, கோவிஷீல்ட்டின் இரண்டு டோஸ்களையும் செலுத்திக்கொண்ட 40 பேரும், கோவாக்சினின் இரண்டு டோஸ்களையும் செலுத்திக்கொண்ட 40 பேரும் தேர்தெடுக்கப்பட்டு, ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.
இந்தநிலையில் மே மாதம் முதல் ஜூன் மாதம்வரை நடைபெற்ற இந்த ஆய்வில், கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளை மாற்றி போட்டுக்கொள்வது பாதுகாப்பானது என்பதுடன், கோவாக்சின் அல்லது கோவிஷீல்டின் இரண்டு டோஸ்களைவிட அதிக எதிர்ப்பு சக்தி தருவது தெரியவந்துள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தற்போது அறிவித்துள்ளது.