Skip to main content

புனே கார் விபத்து சம்பவம்; சிறுவனுக்குச் சாதகமாக மாறிய தீர்ப்பு!

Published on 25/06/2024 | Edited on 25/06/2024
A minor boy to be released on Pune car accident incident

மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் உள்ள கல்யாணி நகர் பகுதியைச் சேர்ந்த வேந்தாந்த் அகர்வால் என்ற 17 வயது சிறுவன், கடந்த மே 19ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் தனது நண்பர்களுடன், தனியார் ஹோட்டலில் மது அருந்திவிட்டு தனது தந்தையின் சொகுசு வாகனத்தில் அதிவேகமாக வந்து முன்னே சென்ற பைக் மீது மோதினார். இந்தக் கோர விபத்தில், பைக்கில் பயணித்த ஐ.டி ஊழியர்களான அனுஷ் மற்றும் கோஷ்டா ஆகிய 2 பேரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனைக் கண்ட அங்கிருந்தவர்கள், விபத்தை ஏற்படுத்திய சிறுவன் வேந்தாந்த் அகர்வாலைப் பிடித்து வைத்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வேந்தாந்த் அகர்வாலைக் கைது செய்து விசாரணை நடத்தினர்.

இதனையடுத்து, சிறார் தொடர்பான குற்றங்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சிறுவனுக்கு  உடனடியாக ஜாமீன் வழங்கியது. இதனால், கடும் விமர்சனங்கள் எழுந்தது. தொடர் விமர்சனங்களின் விளைவாக, அந்தச் சிறுவனுக்கு அளிக்கப்பட்ட ஜாமீன் ரத்து செய்யப்பட்டு சிறார் முகாமில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து, இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசார் சிறுவனின் தந்தை விஷால் அகர்வால் மற்றும்  தாத்தா சுரேந்திரா அகர்வால் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, சிறுவன் வேந்தாந்த் அகர்வாலுக்கு மது வழங்கியதற்காக ஹோட்டல் உரிமையாளர் மற்றும் மேலாளர்கள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், சிறுவனைக் காப்பாற்ற அவனது ரத்தப் பரிசோதனை அறிக்கையை மாற்றிக் கொடுக்க தொழிலதிபர் குடும்பம் தங்களது பணபலத்தைப் பயன்படுத்தி உள்ளதாகத் தகவல் வெளியானது. அதன்படி, ரத்தத்தை மாற்றி வைத்து பரிசோதனை செய்த குற்றச்சாட்டில் 2 மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், சிறுவனின் ரத்தத்திற்கு மாற்றாகச் சிறுவனின் தாயின் ரத்தத்தை மாற்றி வைத்து பரிசோதனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து, சிறுவனின் தாயைப் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்று (25-06-24) மும்பை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் பார்தி டாங்ரே மற்றும் மஞ்சுஷா தேஷ்பாண்டே ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரித்த நீதிமன்றம், ‘இந்த விபத்து எதிர்பாராதவிதமாக நடந்திருக்கிறது. அதனால், விபத்தை ஏற்படுத்திய சிறுவனைச் சிறார் முகாமில் அடைத்து வைத்திருக்க முடியாது. மேலும், இந்த சிறுவனை உடனடியாக சிறார் நீதி வாரியம் விடுவிக்க வேண்டும். சிறுவனின் பெற்றோர் மற்றும் அவரது தாத்தா தற்போது சிறையில் இருப்பதால், அந்த சிறுவன் அவருடைய அத்தையின் கண்காணிப்பில் இருக்க வேண்டும்’ என்று கூறி உத்தரவிட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்