இந்தியாவில் கேரள மாநிலத்தில்தான் தினசரி கரோனா பாதிப்புகள் அதிகமாக இருந்துவருகிறது. இருப்பினும் செப்டம்பர் முதல் வாரத்தில் 30 ஆயிரமாக இருந்துவந்த தினசரி கரோனா பாதிப்பு, தற்போது 15 ஆயிரமாக குறைந்துள்ளது. இந்தநிலையில் கேரளா, கரோனா பாதிப்பின் உச்சத்தைக் கடந்துவிட்டதாக எய்ம்ஸ் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.
எய்ம்ஸ் பேராசிரியர் டாக்டர் சஞ்சய் ராய் இதுதொடர்பாக கூறியுள்ளதாவது, “கடந்த 2 - 3 மாதங்களில் ஏற்பட்ட கரோனா பரவல் தரவுகளைப் பார்க்கும்போது, கேரளா கரோனா பரவலின் உச்சத்தைக் கடந்துவிட்டது. அடுத்த 2 வாரங்களில் கரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை சரிய தொடங்க வேண்டும். தொற்றுநோயியல் மாதிரிப்படி, வடகிழக்கு மாநிலங்களில் நடந்தது போலவே கேரளாவிலும் அக்டோபரின் தொடக்கத்தில் கரோனா பாதிப்புகள் குறைய வேண்டும்.
கேரளாவில் முன்பு செய்யப்பட்ட செரோ கணக்கெடுப்பு முடிவுகள், பெரும்பாலான மக்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது என தெரிவித்தது. ஆனால் சமீபத்திய செரோ கணக்கெடுப்பு, தடுப்பூசி செலுத்திக்கொண்டதாலோ அல்லது கரோனா பாதிப்பு ஏற்பட்டதாலோ 46 சதவீத மக்கள் தொகைக்கு கரோனாவிற்கெதிரான ஆன்டிபாடிக்கள் உள்ளன என தெரிவிக்கிறது. அரசால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் கரோனா பரவல் வேகத்தைக் குறைக்க மட்டுமே செய்கிறது.”
இவ்வாறு டாக்டர் சஞ்சய் ராய் தெரிவித்துள்ளார்.