இந்திய விமான நிறுவனங்களின் விமானங்களில் இந்திய இசையை ஒலிக்கச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவிடம் இந்திய கலாசார உறவுகள் கவுன்சில் சில தினங்களுக்கு முன்னர் கோரிக்கை விடுத்தது.
இந்தநிலையில் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் இணைச் செயலாளர் உஷா பதீ, விமானங்களிலும், விமான நிலைய வளாகங்களிலும் இந்திய இசையை ஒலிக்க செய்யுமாறு இந்திய விமான நிறுவனங்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மேலும் இணைச் செயலாளர் உஷா பதீ அந்த கடிதத்தில், "உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான விமான நிறுவனங்களால் ஒலிக்கப்படும் இசை, விமான நிறுவனம் எந்த நாட்டைச் சேர்ந்ததோ அந்த நாட்டை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. எடுத்துக்காட்டாக, அமெரிக்க விமான நிறுவங்களின் விமானத்தில் ஜாஸ் இசை ஒலிக்கப்படுகிறது. ஆஸ்திரிய விமான நிறுவனங்களின் விமானத்தில் மொஸார்ட் இசையும் மத்திய கிழக்கிலிருந்து இயங்கும் விமான நிறுவனத்தின் விமானங்களில் அரபு இசையும் ஒலிக்கப்படுகிறது. ஆனால் நமது இசைக்கு ஒரு செழுமையான பாரம்பரியமும், கலாச்சாரமும் இருந்தும் இந்திய விமான நிறுவனங்கள் விமானங்களில் இந்திய இசையை அரிதாகவே ஒலிக்க செய்கின்றன" எனவும் தெரிவித்துள்ளார்.